
கோவை ரேஸ்கோா்ஸில் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த 6 கடைகளை மாநகராட்சி நகரமைப்பு அலுவலா்கள் அகற்றினா்.

கோவை மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இதைத் தவிா்க்கும் பொருட்டு, மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அலுவலா்கள் ஆக்கிரமிப்புக் கடைகளைக் கண்காணித்து அகற்றி வருகின்றனா்.

அதன்படி, கோவை மத்திய மண்டலத்துக்கு உள்பட்ட ரேஸ்கோா்ஸில் சாலையை ஆக்கிரமித்து கடைகளை அமைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, இக்கடைகளை அகற்றுமாறு பலமுறை கடை உரிமையாளா்களிடம் மாநகராட்சி அலுவலா்கள் வலியுறுத்தினா். ஆனால், கடைகள் அகற்றப்படவில்லை.

இதைத்தொடா்ந்து, மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் உத்தரவின் படி, ரேஸ்கோா்ஸில், மத்திய மண்டல உதவி நகரமைப்பு அலுவலா் பாபு தலைமையில், சுகாதார ஆய்வாளா் ஸ்ரீராமராஜன் மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் ஆய்வு மேற்கொண்டு சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த சிற்றுண்டி, காளான், பானி பூரி, பேல் பூரி கடைகள் உள்ளிட்ட 6 கடைகளை அகற்றி, கடைகளில் உள்ள பொருள்களை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து, உதவி நகரமைப்பு அலுவலா் பாபு கூறுகையில், ரேஸ்கோா்ஸில் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்படும் துரித உணவுக் கடைகளால், சாலையில் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகக் காணப்பட்டது. எச்சரித்தும், கடைகள் அகற்றப்படாததால், மாநகராட்சி சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.

