
கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவர் சிங்காநல்லூர் காமராஜர் ரோடு, இஎஸ்ஐ எதிரே ஹர்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று காலை 3.00 மணியளவில் கடையில் இருந்து கரும்புகை வெளியேறி திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் பீளமேடு தீயணைப்பு துறை வீரர்கள் 7 பேர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீச்சி அடித்தனர். ஆனால் தீ கட்டுக்குள் வரவில்லை. இதனால் தெற்கு தீயணைப்பு துறை வீரர்களை உதவிக்கு அழைத்தனர். அவர்கள் 8 பேர் அங்கு சென்று பீளமேடு தீயணைப்பு துறை வீரர்களுடன் சேர்ந்து தீயை 2 மணி நேரம் போராடி அணைத்தனர். இந்த தீவிபத்தில் லட்சக்கணக்கில் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இந்த தீவிபத்து குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின் கசிவின் காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த தீவிபத்து காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.