கோவை,

கோவை காளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஹாரி கோம்ஸ். கோவை சிங்காநல்லூர் பகுதியில் கார்மல் பிரேயர் டவர் என்ற பெயரில் கிறிஸ்தவ தேவாலயம் நடத்தி வந்தார். மேலும் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கும் இந்தியா முழுவதும் பல்வேறு ஊர்களுக்கும் சென்று கிறிஸ்தவ மத பிரசங்கம் செய்வது இவரது வழக்கம். மேலும் கோவை சூலூர் அடுத்த போகம்பட்டி பகுதியில் சாஸ்வி இன்டர்நேஷனல் பள்ளி என்ற பள்ளியை நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் அவர் மரணம் அடைந்தார் . அதன் பிறகு அவரது சாவில் மர்மம் உள்ளது உள்ளிட்ட பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து ஹாரி கோம்ஸ் மருமகன் சதீஷ் தமிழக முதல்வர் , கோவை மாவட்ட கலெக்டர், மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: 1980 ஆம் ஆண்டுகளில் ஆந்திராவில் இருந்து கோவைக்கு வந்த ஹாரி கோம்ஸ் முதல் மனைவி மகனுடன் வாழ்ந்து வந்தார். பின்னர் தனது அலுவலகத்தில் வேலை செய்த மீனா என்ற டில்லிஸ் கோம்ஸ் என்ற கேரளாவை சேர்ந்த பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு பின்னர் தனது முதல் மனைவி மகனை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். தொழிலில் பிரச்சனைகள் ஏற்படவே ஹாரி கோம்ஸ் கிறிஸ்தவ மத போதகராக மாறினார். பின்னர் வெளிநாட்டிலிருந்து மதமாற்றம் செய்வதற்காக கோடிக்கணக்கான ரூபாய்களை வாங்கி குவித்தார் . கோவை காந்தி மாநகர் பகுதியில் ஹோம் ஆப் ஹோப் என்ற பெயரில் காப்பகம் ஒன்றை நடத்தி வந்தபோது 2013 ஆம் ஆண்டு குழந்தை ஒன்று இறந்து போனது. இதைத் தொடர்ந்து ஹாரி கோம்ஸின் மனைவி டில்லிஸ் கோம்ஸ் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளியே வந்தார். 2008 ஆம் ஆண்டு இவர்களின் மகன் சாஸ்வி காரை ஓட்டி செல்லும் போது நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் உடலை கணபதி மாநகர் பகுதியில் இருந்த காப்பகத்தின் வளாகத்தில் புதைத்து அதனை கல்லறை மற்றும் பிரார்த்தனை மையமாக மாற்றினர் .இந்த நினைவிடத்திற்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஹாரி கோம்ஸ் தவறாமல் காலையில் சென்று சிறிது நேரம் பிரார்த்தனை செய்துவிட்டு பின்னர் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஆலயத்திற்கு சென்று பிரார்த்தனை செய்வது ஹாரி கோம்ஸ் வழக்கம். மேலும் சூலூர் போகம்பட்டி பகுதியில் சாஸ்வி இன்டர்நேஷனல் பள்ளி என்ற பள்ளியை நடத்தி வந்தார் .இந்த பள்ளியில் வட மாநிலங்களைச் சேர்ந்த ஆதரவற்ற மாணவர்களை அழைத்து வந்து படிக்க வைத்து அவர்களை காண்பித்து வெளிநாட்டிலிருந்து கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை நிதி உதவியாக பெற்று வந்தார் .

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சூலூரைச் சேர்ந்த சூசன் என்பவரின் மருமகள் லண்டனை சேர்ந்த ரீபா ஜோஷ்வா என்பவர் சுமார் 5 கோடி ரூபாய் பணத்தை கிறிஸ்தவ சேனல் துவங்குவதற்காக கொடுத்துள்ளார். ஆனால் அந்த பணத்தை அவர் டிவி சேனலுக்கு முதலீடு செய்யாமல் ஆந்திராவில் உள்ள தொழிலதிபர்களுக்கு வட்டிக்கு விட்டிருந்தார். இந்த தகவல் அறிந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் ஹாரி ஹோம்ஸ் உள்ளிட்டோரை அழைத்து விசாரணை நடத்தினர் . இந்த விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கிற்காக மட்டுமல்லாமல் வெளிநாட்டு பணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக மத்தியில் உள்ள ஆளும் கட்சியைச் சேர்ந்த. ஆனந்தமான வழக்கறிஞரை இதற்காக நியமித்து இன்றும் அதற்குரிய விசாரணையை பார்த்து வருகிறார். கடந்த மாதம் ஹாரி கோம்ஸ் திடீரென மரணம் அடைந்தார் . பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள அவரது சொத்துக்களை அபகரிக்க முதல் மனைவியின் மகனுக்கு தெரியாமல் வாரிசு சான்றிதழை பெற டில்லிஸ் கோம்ஸ் முயற்சி செய்து வருகிறார் . மேலும் மருமகன் சதீஷை தனது மகளையும் அவர்களது குழந்தைகளையும் சந்திக்க விடாமல் கருத்து வேறுபாடு உண்டாக்கி மருமகன் குடும்பத்திற்குள் டில்லிஸ் கோம்ஸ் பிரிவினையை ஏற்படுத்தி உள்ளார். குறிப்பாக கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த நாராயணன் நம்பூதிரி உள்ளிட்ட பல மாந்திரீக நபர்களை வைத்து தனக்கு வேண்டிய காரியங்களை பூஜைகள் மூலம் சாதித்துக் கொள்வது டில்லிஸ் கோம்ஸ் வழக்கம்.தற்போது ஹாரி கோம்ஸ் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்தோடு கணபதி மாநகர் பிரார்த்தனை மையத்தில் உள்ள மகனின் கல்லறையை வேறு இடத்திற்கு மாற்ற திட்டமிட்டு இதற்கான உத்தரவு கடிதத்தை முறைகேடான வகையில் பெற்றுள்ளார் . அதேபோல ஹாரி கோம்ஸ் இறந்து ஒரு மாதம் ஆகப்போகிறது. அவரது உடல் போகம்பட்டியில் உள்ள பள்ளி வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது .மேலும் கணபதி மாநகர் பகுதியில் இருந்து தனது மகனின் உடலை அப்புறப்படுத்தி விட்டால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை விற்பனை செய்து விட முடியும் என்பது தான் டில்லிஸ் கோம்ஸ் திட்டம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஹாரி கோம்ஸ் உயிருடன் இருக்கும் போது தான் இறந்து போனால் தன்னுடைய உடலை தனது மகனுக்கு அருகிலேயே புதைக்க வேண்டும் என்றும் தனது குடும்பத்தாரின் கல்லறையாக இந்த இடம் செயல்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தார். அதனை மீறி அவரது மனைவி டில்லிஸ் கோம்ஸ் பல்வேறு காரியங்களை செய்து வருகின்றார் ஹாரி கோம்ஸின் முதல் மனைவியின் மகனுக்கு சொத்துக்கள் எதையும் கொடுக்கக் கூடாது என்ற நோக்கத்தில் தான் தற்போது இந்த காரியங்களை அவசர அவசரமாக டில்லிஸ் கோம்ஸ் செய்து வருகிறார். எனவே கணபதி மாநகரில் உள்ள கல்லறையை அகற்றாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஹாரி கோம்ஸ் சாவில் சந்தேகம் உள்ளதால் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் வாரிசு சான்றிதழ் தருவதை தடுக்க வேண்டும் என்றும் அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் ஆந்திராவைச் சேர்ந்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.பி.,அந்தஸ்திலான போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் இந்த விவகாரத்தில் தலையிட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *