
கோவை ஜனதா நகர் பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவர் விஜயன். இவரது மளிகை கடைக்கு புதன்கிழமை சரவணம்பட்டி உணவு பாதுகாப்பு அலுவலர் சக்திவேல் சென்றுள்ளார். அப்போது சக்திவேல் 5 ஆயிரம் ரூபாய் பணம் தர வேண்டும் என கூறியுள்ளார் .அப்போது கடைக்காரர் விஜயன் பணம் எதற்காக தரவேண்டும் என கேட்டுள்ளார் .பணம் தரவில்லை என்றால் அடிக்கடி கடையில் சோதனை நடத்தி அபராதம் விதிக்க வேண்டி இருக்கும் என்று சக்திவேல் கூறியிருக்கிறார். அப்போது கடைக்காரர் விஜயன் ஏற்கனவே மாநகராட்சிக்குரிய அனைத்து லைசென்ஸ் வாங்கி வரி தொகை அனைத்தும் சரியான முறையில் செலுத்தி இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார். சிறிது நேரம் வாக்குவாதம் செய்துவிட்டு உணவு பாதுகாப்பு அலுவலர் சக்திவேல் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து விஜயன் உணவு பாதுகாப்பு அலுவலர் சக்திவேலின் உதவியாளருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு எதற்காக 5 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார் .அப்போது செல்போனில் பேசிய சக்திவேலின் உதவியாளர் எதுவாக இருந்தாலும் நீங்கள் அலுவலரிடம் தான் பேச வேண்டும் என்றும் நேரில் பேசிக் கொள்ளலாம் போனில் வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார். அப்போது விஜயன் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என சம்பாதித்து வரும் சூழலில் இப்படி 5 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டால் தீக்குளிப்பதை தவிர வேறு வழியில்லை என ஆதங்கத்துடன் பேசியுள்ளார். இந்த சூழலில் மீண்டும் நேற்று முன்தினம் காலை விஜயன் நடத்தும் மளிகை கடைக்கு வந்த உணவு பாதுகாப்பு அலுவலர் சக்திவேல் கடையில் சோதனை செய்துள்ளார் .அப்போது 300 கிராம் அளவிற்கு பிளாஸ்டிக் கவர்கள் இருந்துள்ளது .மேலும் தூக்கி வீசி எறிவதற்காக அழுகிய நிலையில் இருந்த தக்காளியை கடைக்குள் விஜயன் வைத்திருந்ததாக கூறப்படுகிறது .உடனே உணவு பாதுகாப்பு அலுவலர் சக்திவேல் பிளாஸ்டிக் கவர்களை கைப்பற்றி அழுகிய தக்காளி இருப்பதாக கூறி அபராதம் விதித்துள்ளார் .பின்னர் ஒரு செல்போன் நம்பரை கொடுத்து ஜிபே மூலம் 2 ஆயிரத்து 200 ரூபாய் அபராத தொகையை அனுப்புமாறு கூறியிருக்கிறார் .விஜயன் சிறிது நேரத்தில் சக்திவேல் கூறிய ஜிபே நம்பருக்கு 2 ஆயிரத்து 200 ரூபாய் பணத்தை அனுப்பி வைத்துள்ளார். அதன் பிறகு விஜயனுக்கு வாட்ஸ்அப் மூலம் 2,000 ரூபாய் அபராதம் செலுத்தியதாக சலான் வந்துள்ளது. இதுகுறித்து கடைக்காரர் விஜயன் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை கோவை மாவட்ட தலைவர் லிங்கத்திடம் புகார் அளித்தார். இது குறித்த லிங்கம் செய்தியாளர்களிடம் கூறும் போது ஆய்வுக்கு சென்ற உணவு பாதுகாப்பு அலுவலர் சக்திவேல் அதே பகுதியில் உள்ள பல கடைகளுக்கு சென்று தலா 5,000 ரூபாய் வீதம் லஞ்சமாக வசூலித்து சென்றுள்ளதாக அப்பகுதியில் உள்ள கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அப்படி அபராதம் கொடுக்காவிட்டால் தொடர்ந்து அபராதம் விதிப்பார்கள் என்ற பயத்தில் பல வணிகர்கள் வேறு வழியில்லாமல் லஞ்சத்தை கொடுத்து வருகிறார்கள் .இது குறித்து விரைவில் அனைத்து வணிகர்களையும் திரட்டி புகார் அளிக்க இருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார். மேலும் அபராத தொகையை 2,000 ரூபாய் என சலான் அனுப்பிவிட்டு 2 ஆயிரத்து 200 ரூபாய் பணத்தை ஜிபே மூலம் வசூலித்துச் சென்ற உணவு பாதுகாப்பு அலுவலர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதுகுறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் சக்திவேலின் உதவியாளர் செல்போன் மூலம் கடைக்காரரிடம் பேசும் ஆடியோ மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் சக்திவேல் கடையில் ஆய்வு செய்யும் போது கடைக்காரரை மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.