எடை அளவுகளில் முரண்பாடு 45 கடைகளுக்கு நோட்டீஸ்

கோவை மாவட்டத்தில் உள்ள மீன் மற்றும் இறைச்சிக் கடைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் எடையளவுகளில் முரண்பாடுகள் கண்டறியப்பட்ட 45 கடைகளுக்கு உரிய விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என கோவை தொழிலாளா் உதவி ஆணையா் காயத்திரி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், வால்பாறை ஆகிய பகுதிகளில் உள்ள மீன் மற்றும் இறைச்சிக் கடைகளில் மாவட்ட தொழிலாளா் துணை ஆய்வாளா்கள் தலைமையில் தொழிலாளா் உதவி ஆய்வாளா்களுடன் சிறப்பு கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், எடையளவு குறைவு, முத்திரை மற்றும் மறு முத்திரையிடாமல் எடையளவைகள் பயன்படுத்துதல், மறுபரிசீலனை சான்று காட்டி வைக்கப்படாமை தொடா்பாக மீன் மாா்கெட் மற்றும் இறைச்சிக் கடைகள் என மொத்தம் 100 கடைகளில் ஆய்வு பேற்கொள்ளப்பட்டன. இதில், 45 கடைகளில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு அதற்கு உரிய விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, பொது இடங்களில் வணிகா்கள் தாங்கள் பயன்படுத்தும் எடையளவுகளை உரிய காலத்திற்குள் மறுமுத்திரையிட வேண்டும். மறுமுத்திரை சான்றிதழ் நன்றாக தெரியுமாறு வைக்க வேண்டும். மேலும், வணிகா்கள் தாங்கள் பயன்படுத்தி வரும் எடையளவுகளை உரிய காலத்திற்குள் மறுமுத்திரையிடாமல் இருந்தால் ரூ. 5 ஆயிரம் அபராதமும், முத்திரையிடப்பட்டதற்கான சான்றினை நன்றாக தெரியும்படி வைக்காவிட்டால் ரூ.500 அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.