
கோவை,
கோவையில் நடைபெற்ற நாம் திராவிடர் கட்சியின் தலைமைச் செயற்குழு கூட்டத்தில், நடிகர் விஜய்யை சந்தித்து நடப்பு அரசியல் குறித்தும், 2026 தேர்தல் தொடர்பான செயல்திட்டங்கள் குறித்தும் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தின் அடிப்படையில் முதற்கட்டமாக, சென்னையில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்தை நாம் திராவிடர் கட்சியின் தலைவர் திராவிடன் பன்னீர் செல்வம் சந்தித்து, பள்ளி மாணவ, மாணவியரிடையே பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகிய தலைவர்களைப் பற்றிப் படிக்க வேண்டுமென்று நடிகர் விஜய் பேசியதற்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டதோடு, மக்கள் நலனில் அக்கறையுடன் செயல்படும் விஜய் மக்கள் இயக்கத்திற்கு தனது ஆதரவையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டதாகவும், அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்த கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். இந்த சந்திப்பின்போது, நாம் திராவிடர் கட்சியின் பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.ராஜா, கோவை மாவட்டச் செயலாளர் பழனிகுமார், விஜய் மக்கள் இயக்கத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தலைவரும், கவுன்சிலருமான பர்வேஸ், அம்மாபேட்டை ஒன்றியத்தலைவரும், பாபநாசம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான டி.ஆர்.எம்.சசி, அம்மாபேட்டை ஒன்றிய தொண்டரணித் தலைவர் லோகேந்திர பிரசாத், அம்மாபேட்டை ஒன்றிய பொருளாளர் விஜய் மோகன், அம்மாபேட்டை ஒன்றிய மகளிரணித் தலைவர் ஜி.குணசுந்தரி ஆகியோர் உடனிருந்தனர்.