
கோவை,கோவை மத்திய சிறை கோவை மத்திய சிறை கடந்த 1872-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. 165 ஏக்கர் பரப்பளவில் உள்ள கோவை மத்திய சிறையில் 2,134 கைதிகளை அடைக்க வசதிகள் உள்ளன. இங்கு தற்போது 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் உள்ளனர். ஆண்கள் சிறை மற்றும் பெண்கள் சிறை என தனித்தனி பிரிவாக செயல்பட்டு வருகிறது. சிறை அதிகாரிகள், ஊழியர்கள் என 400-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.இங்கு அடைக்கப்பட்டுள்ள கைதிகள் விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டு வருவதும் பிறகு அவர்கள் உள்ளே வரும்பொழுது தீவிரமாக சோதனை செய்யப்பட்டு உள்ளே அனுப்பப்படுவதும் வழக்கமான நடைமுறை. அதேபோல தினமும் கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள் கொடுக்கும் உணவு பொட்டலங்கள் உள்ளிட்டவற்றை தீவிர பரிசோதனைக்கு பிறகு கைதிகளிடம் சிறையில் உள்ள காவலர்கள் வழங்குவார்கள். இந்நிலையில் சிறையில் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டுள்ள தினேஷ், உதயகுமார் ,அரவிந்த் ,ஹரிஹரன், அழகர் சாமி ,அய்யனார் உள்ளிட்டோர் ஒரே பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் அடிக்கடி அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை சிறை வார்டன்கள் கவனத்திற்கு சென்றுள்ளது. மேலும் இவர்கள் ஒரு குழுவாக கடந்த சில நாட்களாக செயல்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு சிலரை வேறு பிளாக்கிற்கு சிறைத்துறை அதிகாரிகள் மாற்ற முடிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து இன்று காலை 6:30 மணி அளவில் சிறை வார்டன்கள் சிலர் கைதிகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். மேலும் குறிப்பிட்ட அந்த சில கைதிகள் அடைக்கப்பட்டுள்ள பிளாக்கில் சென்று சோதனையிட சென்றுள்ளனர். அப்போது அங்கே இருந்த சில கைதிகள் எதற்காக அடிக்கடி எங்களது பிளாக்கில் வந்து சோதனை செய்கிறீர்கள் என எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து சிறை வார்டன்களுக்கும் கைதிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இந்த தகவல் மற்ற சிறை வார்டன்களுக்கும் காவலர்களுக்கு தெரியவந்தது. உடனே அவர்கள் அனைவரும் அந்த குறிப்பிட்ட பிளாக்குக்கு வந்து கைதிகள் மீது லத்தி சார்ஜ் செய்துள்ளனர். அதே சமயத்தில் கைதிகளும் சிறை வார்டன்களை சரமாரியாக அடித்தனர். இதில் சிறை வார்டன்கள் மோகன் ராம், பாபு ஜான், விமல் ராஜ், ராகுல் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். உடனே ஏராளமான காவலர்கள் அந்த பிளாக்கின் முன்பு குவிக்கப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறை கைதிகள் 10க்கும் மேற்பட்டோர் அங்கிருந்த மரத்தின் மீது ஏறிக்கொண்டு தங்கள் கைகளை கிழித்து கொண்டனர். இதில் அவர்களுக்கு கைகளில் ரத்தம் வழிந்து ஓடியது. தொடர்ந்து சிறைத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கைதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் .மேலும் படுகாயம் அடைந்த சிறை வார்டன்கள் மோகன் ராம் ,பாபு ஜான், விமல் ராஜ், ராகுல் ஆகியோரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து போலீஸ் உயர் அதிகாரிகள் இடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தி மரத்திலிருந்து கீழே இறங்க வைத்தனர். இந்த சம்பவத்தால் சிறை வளாகத்திற்குள் போர்க்களம் போல காட்சி அளித்தது. இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.