
கோவை,
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் நவ ராம்ஜி என்பவரின் மகன் ஜகன்லால் கட்டாரி (60). இவர் பெங்களூருவில் அன்மோல் ஜுவல்லரி என்ற நகை தயாரிப்பு நிறுவனம் கடந்த 25 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இவர்களது நிறுவனத்தில் தயாரிக்கப்படும் தங்க நகைகள் நகை கடைகளுக்கு விற்பனை செய்யப்படுவது வழக்கம். இவர்களது நிறுவனத்தில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கோஜா ராம் என்பவரின் மகன் அனுமன் திவேசி என்பவர் மார்க்கெட்டிங் மேனேஜராக பணிபுரிந்து வந்தார் .இவர் கோவை மற்றும் தமிழக முழுவதும் உள்ள நகை கடைகளுக்கு நகைகளை சப்ளை செய்வது வழக்கம். நகை கடைகளுக்கு சப்ளை செய்தது போக மீதம் உள்ள தங்க நகைகளை அதற்கு பிரத்தியேகமாக உள்ள டெலிவரி நிறுவனம் மூலம் பெங்களூரில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பது வழக்கம். இந்நிலையில பெங்களூருவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட 15 கிலோ 447 கிராம் தங்க நகைகளை மார்க்கெட்டிங் மேனேஜராக இருந்த அனுமன் திவேசி கோவையில் பெற்றுக் கொண்டார். விற்பனை செய்தது போக மீதமுள்ள நகைகள் என 1கிலோ 867 கிராம் நகைகளை மட்டும் திருப்பி தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி உள்ளார் .13 கிலோ 550 கிராம் தங்க நகைகளை விற்றதாக கூறியிருக்கிறார் .ஆனால் அதற்குரிய பதிலை சரியாக சொல்லாமல் இருந்துள்ளார். இது குறித்து நிறுவனத்தின் உரிமையாளர் பலமுறை கேட்டும் சரியான பதில் அளிக்காமல் கால தாமதப்படுத்தி உள்ளார். இதை தொடர்ந்து நிறுவனத்தின் உரிமையாளர் ஜகன் லால் கட்டாரி கோவைக்கு வந்து இது குறித்து நகைக்கடை உரிமையாளர்களிடம் பேசினார். அப்போது அனுமன் திவேசி நகைகளை கடை உரிமையாளர்களுக்கு விற்பனை செய்யாமல் ஏமாற்றியுள்ளது தெரிய வந்தது. தொடர்ந்து அனுமன் திவேசியை தொடர்பு கொள்ள முயன்ற போது அவர் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. 6 கோடி ரூபாய் மதிப்புள்ள 13 கிலோ 580 கிராம் தங்க நகையுடன் மார்க்கெட்டிங் மேனேஜர் அனுமன் திவேசி தலைமறைவானது தெரிய வந்தது. இதை தொடர்ந்து ஜகன்லால் கட்டாரி வெரைட்டி ஹால் ரோடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆறு கோடி ரூபாய் நகைகளுடன் தலைமறைவான மார்க்கெட்டிங் மேனேஜரை தேடி வருகின்றனர்.