
கோவை மாநகர காவல் ஆணையரகத்தின் கீழ் செயல்படும் மாநகரக் குற்றப்பிரிவு தனிநபர்களிடம் நடைபெறும் ரூபாய் 25 லட்சத்திற்கு மேலான பெரிய அளவிலான மோசடிகள், போலி ஆவணத் தயாரிப்பு உள்ளிட்ட ஒயிட் காலர் குற்றங்களை விசாரித்து வருகிறது. அதேவேளையில், பத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அல்லது பொது வைப்புத்தொகை மோசடிகளைப் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
கோவை மாநகர குற்றப்பிரிவில் ஆண்டுதோறும் சுமார் 50 எஃப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்படுகின்றன. பொருளாதார குற்றப்பிரிவில் ஆண்டுக்கு 5 முதல் 10 வழக்குகள் மட்டுமே பதிவாகின்றன. போலீசாரின் சட்ட ஆலோசகரிடம் தீவிர ஆலோசனை பெற்று, முகாந்திரம் உறுதியான பின்னரே மாநகர குற்றப்பிரிவில் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால், அப்படி பதியப்படும் பல வழக்குகளில் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படுவதில்லை என்ற பலத்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வழக்கு பதிவு செய்யப்பட்ட உடனேயே சம்பந்தப்பட்ட பெரும்புள்ளிகள் மற்றும் குற்றவாளிகள் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி இடைக்காலத் தடை பெற்றுவிடுகின்றனர். இதனால் வழக்கின் ஆரம்பக்கட்ட விசாரணையே அடியோடு முடங்கிப் போகிறது. வழக்கு பதிவு செய்த உடனே குற்றவாளிகளை கைது செய்யாமல் இருப்பதும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தேவையின்றி காலதாமதம் செய்வதுமே குற்றவாளிகளுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கேசவ பாண்டியன் என்பவர் அளித்த புகாரின் பேரில், கடந்த 2024-ம் ஆண்டு சியூபி வங்கி அதிகாரிகள் 6 பேர் மீது கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், குற்றவாளிகள் ஒவ்வொருவரும் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால தடை பெறுவதும், அந்த தடையை கேசவ பாண்டியன் மனு தாக்கல் செய்து நீக்குவதுமாக இழுபறி நீடித்தது. சமீபத்தில் வங்கி அதிகாரி ஒருவரின் இடைக்கால தடையை நீக்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தி, ‘4 வாரங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்’ என கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கு அதிரடி உத்தரவிட்டார். இருப்பினும் போலீசார் வங்கி அதிகாரிகள் யாரையும் கைது செய்யவில்லை; ஆவணங்களையும் பறிமுதல் செய்யவில்லை. மாறாக நீதிமன்றம் மூலமாக சம்மன் அனுப்பி ஆஜராக உத்தரவிட்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு குற்றவாளிகள் நேரில் ஆஜராகாமல், வேறு கிளை வங்கி அதிகாரிகள் மூலம் ஆவணங்களை ஒப்படைக்க ஒரு மாத அவகாசம் கோரினர். இதற்கு கோவை 7-வது மாஜிஸ்திரேட்டு கடும் கண்டனம் தெரிவித்தார். இதற்கிடையே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் இடைக்கால தடை கேட்டு மனு தாக்கல் செய்து வழக்கை இழுத்தடித்து வருகின்றனர்.
இதே போல கோவை கிராஸ்கட் ரோட்டில் இயங்கி வந்த ‘ஆதித்யா ஆட்டோ ஸ்டோர்’ நிறுவன உரிமையாளர் செல்வகுமார், தனது மனைவியின் கையெழுத்தை போலியாகப் போட்டு சொந்த சகோதரரே ரூபாய் 75 கோடிக்கு மேல் ஏமாற்றிவிட்டதாக 2023-ல் புகார் அளித்தார். தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், கையெழுத்து ஆவணங்களை தடய அறிவியல் சோதனைக்கு அனுப்புவதில் காலதாமதம் செய்த போலீசார், 2025-ல் ஏதேதோ காரணங்களைக் கூறி அவசரமாக வழக்கை முடித்து வைத்துவிட்டனர். இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என செல்வகுமார் தொடர்ந்து போராடி வருகிறார்.
இதேபோல், சிங்காநல்லூர் பகுதியில் செயல்படும் தனியார் கல்லூரி ஒன்று, வெளிநாட்டில் மருத்துவம் படிக்க வைப்பதாகக் கூறி மாணவர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்தது. தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்ட பல மாணவர்களின் புகார்கள் கிடப்பில் போடப்பட்ட நிலையில், ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியான நடராஜன் என்பவர் இழந்த 55 லட்சம் ரூபாய் தொடர்பாக மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், அந்த வழக்கிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு கல்லூரி நிர்வாகத்தினர் நீதிமன்றத்தில் இடைக்கால தடை பெற்றுவிட்டதால் வழக்கு விசாரணை முடங்கிக் கிடக்கிறது
இதுபோல பல வழக்குகள் விடை தெரியாமல் முடங்கி கிடக்கிறது. மேலும் பெரிய அளவிலான மோசடி வழக்குகளை விசாரிக்கும் திறமையான அதிகாரிகள் திடீரென மாற்றப்படுவதும் விசாரணையை முடக்குகிறது. இதனால் புதிய அதிகாரி வரும் வரை கோப்புகள் தூங்கி வழிகின்றன.
குற்றவாளிகள் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் அல்லது இடைக்கால தடை கோரும்போது, அரசு மற்றும் காவல்துறை தரப்பில் தகுந்த ஆதாரங்களுடன் பதில் மனு தாக்கல் செய்து வாதாட தவறிவிடுவதால், பல ஆண்டுகளாக குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து எளிதாகத் தப்பி விடுகின்றனர்.
கோடிக்கணக்கில் பணத்தை இழந்து தவிக்கும் அப்பாவி பொதுமக்களின் நலனைக் காக்க, காவல்துறையைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழக முதல்வர் உடனடியாக தலையிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
குறிப்பாக, பெரிய அளவிலான நிதி மோசடி மற்றும் முக்கிய வழக்குகளை விசாரிக்கும் விசாரணை அதிகாரிகளை காரணமின்றி இடமாற்றம் செய்யக்கூடாது என்றும், வழக்குப்பதிவு செய்த உடனே குற்றவாளிகளை கைது செய்வது, அவர்கள் முன்ஜாமீனோ இடைக்கால தடையோ பெற முடியாத வகையில் உரிய ஆதாரங்களுடன் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல் துறைக்கு அரசு கடும் உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.