
கோவையில் பட்டப்பகலில் 20 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து, சிசிடிவி கேமராக்கள் மற்றும் பூஜை அறையை அடித்து நொறுக்கி, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சாமி சிலைகளைத் திருடிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் உள்ளூர் போலீசார் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகக் கூறி, பாதிக்கப்பட்ட நபர் கோவை மாநகர காவல் ஆணையரகத்தில் இன்று பரபரப்பு புகார் மனு அளித்துள்ளார்.
கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி. ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஆர்.மணிகண்டன் (வயது 52). இவருக்கு தெலுங்குபாளையம் பகுதியில் சொந்தமாகக் கட்டிடம் மற்றும் காலி இடம் உள்ளது. இந்த வளாகத்தில் ஆன்மீக பூஜை அறை மற்றும் அவரது அலுவலகம் இயங்கி வருகின்றன. மேலும், சினிமா தயாரிப்பு நிறுவனம், துணிக்கடை, டீக்கடை உள்ளிட்டவையும் வாடகை அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன. தனது குடும்ப அவசரப் பணத் தேவைக்காக மணிகண்டன், விமல் என்பவரிடம் குறிப்பிட்ட இடத்தின் ஒரு பகுதியை அடமானம் வைத்து பைனான்ஸ் முறையில் பணம் பெற்றுள்ளார். ஆனால், கொடுக்கல்–வாங்கல் கணக்கில் விமல் தரப்பில் அநியாய வட்டி கேட்டுத் தகராறு செய்யப்பட்டதால் இருவருக்கும் இடையே கடும் பிரச்சனை எழுந்தது. இதுதொடர்பாக கோவை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மணிகண்டன் தொடுத்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ள சூழலில், விமலும் அவரது தந்தை பாஸ்கரனும் சமரசம் பேசுவதாகக் கூறி மணிகண்டனை அணுகியுள்ளனர். அப்போது சுமுக உடன்பாடு எட்டப்படாததால் ஆத்திரமடைந்த இருவரும், “நீதிமன்ற வழக்கிற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம்; ரவுடி வழியில் அடியாட்களை வைத்து இடத்தை பிடுங்கிக் கொள்வோம்” என்று மணிகண்டனுக்குப் பகிரங்கமாகக் கொலை மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், இன்று (23-ந் தேதி) காலை சுமார் 8 மணியளவில் விமல் தலைமையில் வினீத் மற்றும் மாற்று மதத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கூலிப்படையினர் பயங்கர ஆயுதங்களுடன் மணிகண்டனின் அலுவலக வளாகத்திற்குள் அத்துமீறிப் புகுந்தனர். அங்கு தங்கியிருந்த கண்ணன் என்பவரது ஊழியர்களைக் கண்மூடித்தனமாக அடித்து விரட்டிய அந்தக் கும்பல், குற்றச் செயல்களுக்கு ஆதாரம் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த 5-க்கும் மேற்பட்ட சிசிடிவி (CCTV) கேமராக்களைச் சுத்தியலால் சுக்குநூறாக அடித்து நொறுக்கியது.
தொடர்ந்து கட்டிடத்தின் பிரதான பூட்டை உடைத்து உள்ளே புகுந்த அடியாட்கள், அங்கிருந்த ஆன்மீக பூஜை அறையை அடித்துத் தரைமட்டமாக்கிப் பொருட்களைச் சூறையாடினர். மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான புனித தெய்வ சிலைகளையும் திருடிக் கொண்டு, தாங்கள் கொண்டு வந்த புதிய பூட்டை கட்டிடத்திற்குப் போட்டு பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணிகண்டன், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தார். தொடர்ந்து இதுதொடர்பாக செல்வபுரம் காவல் நிலையத்தில் விரிவான எழுத்துப்பூர்வ புகார் அளித்தார். ஆனால், செல்வபுரம் போலீசார் குற்றச் செயலில் ஈடுபட்ட விமல் மற்றும் அவரது ஆட்கள் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) கூடப் பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வருவதாகவும், எதிர் தரப்பினருக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டு தமக்கு உரிய பாதுகாப்பு வழங்க மறுப்பதாகவும் மணிகண்டன் குற்றம்சாட்டியுள்ளார்.
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் சூழலில் பட்டப்பகலில் நடந்த இந்த அட்டகாசத்தால் உயிருக்கும் உடமைக்கும் கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மணிகண்டன் இன்று நேரில் சென்று புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில், “அத்துமீறி நுழைந்து அலுவலகத்தை அடித்து நொறுக்கிய விமல், பாஸ்கரன், வினீத் மற்றும் 20 பேர் கொண்ட கும்பல் மீது இந்திய குற்றவியல் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து உடனடியாகக் கைது செய்ய வேண்டும்; சட்டவிரோதமாகப் போடப்பட்ட பூட்டை அகற்றி, திருடிச் செல்லப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சாமி சிலைகளை மீட்டுத் தர வேண்டும்; ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்ளும் செல்வபுரம் காவல் நிலையத்தின் மீது உரிய விசாரணை நடத்தி எனக்கும் எனது சொத்திற்கும் தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்கிட வேண்டும்” என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். பட்டப்பகலில் 20 பேர் கொண்ட கும்பல் அலுவலகத்தைச் சூறையாடி சிலைகளைத் திருடிச் சென்ற சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.