தமிழகத்தில் முன்னணி ஆடை தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ‘ நாயுடு ஹால்’ நிறுவனத்தின் நிறுவனர் மறைந்த எம்.ஜி. நாயுடு ஆவார். இவரது மனைவி ஜெயலட்சுமி. இந்த தம்பதிக்கு சுகுமார், ராமசாமி, வேணுகோபால் ஆகிய 3 மகன்களும், தனலட்சுமி என்ற மகளும் உள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் கைலாசகிரி கிராமத்தில் கடந்த 1978-ஆம் ஆண்டு ஜெயலட்சுமி பெயரில் 7 சென்ட் நிலம் வாங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 1994-ஆம் ஆண்டு அவரது மகன்களான ராமசாமியும், வேணுகோபாலும் இணைந்து அதே பகுதியில் மேலும் 10 சென்ட் நிலத்தை கிரயம் செய்தனர். இதன்மூலம் அந்த பகுதியில் குடும்பத்திற்கு சொந்தமாக மொத்தம் 17 சென்ட் பூர்வீக நிலம் இருந்து வந்தது.


இதற்கிடையே ஜெயலட்சுமி, அவரது மகன் ராமசாமி மற்றும் ராமசாமியின் மனைவி சுசீலா ஆகியோர் அடுத்தடுத்து காலமானார்கள். இதனால் சட்டப்படி அந்த நிலத்தில் ராமசாமியின் வாரிசுகளான சென்னை போயஸ் கார்டனைச் சேர்ந்த பூர்ணிமா மற்றும் அவரது சகோதரர் அரவிந்த் ஆகியோருக்கு பங்கு உரிமை இருந்து வந்தது. இந்த நிலையில், சென்னை தி.நகரைச் சேர்ந்த சித்தப்பா வேணுகோபால், வாரிசுகளான பூர்ணிமா மற்றும் அரவிந்திற்கு தெரியாமலும், அவர்களது அனுமதியின்றியும் கடந்த 2021-ஆம் ஆண்டு ஆம்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் வைத்து அந்த 17 சென்ட் நிலத்தையும் தனது மகள் நந்திதா பெயருக்கு செட்டில்மென்ட் பத்திரமாக பதிவு செய்து மோசடி செய்துள்ளார். மேலும், அந்த பூர்வீக நிலத்தில் தொழிற்சாலை ஒன்றையும் அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.


கடந்த ஆகஸ்ட் மாதம் தங்களது சொந்த ஊருக்கு வந்த பூர்ணிமா, வில்லங்க சான்றிதழைப் பார்த்தபோதுதான், தங்களுக்கு சேர வேண்டிய பல கோடி ரூபாய் மதிப்பிலான பூர்வீக சொத்தை சித்தப்பா வேணுகோபால் தங்களது பெயர்களை திட்டமிட்டு மறைத்து மகள் பெயருக்கு முழுமையாக மாற்றியிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து நேரில் சென்று நியாயம் கேட்ட பூர்ணிமாவுக்கு, வேணுகோபாலும் அவரது மகள் நந்திதாவும் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்து விரட்டியடித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த பூர்ணிமா, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரில் புகார் மனு அளித்தார். எஸ்பியின் உத்தரவின் பேரில், உமராபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த மோசடி விவகாரத்தில் நிலத்தை அபகரித்த ஜி.வேணுகோபால், அவரது மகள் நந்திதா, உரிய ஆவணங்களை சரிபார்க்காமல் பட்டா மாறுதல் செய்து கொடுத்த கைலாசகிரி கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமரன், மண்டல துணை வட்டாட்சியர் பாரதி, பத்திர எழுத்தர் நந்தகுமார் மற்றும் கடந்த 2021-ஆம் ஆண்டு பத்திரப்பதிவு செய்த ஆம்பூர் சார்பதிவாளர் ஆகிய 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *