
திருக்குறள், திரிகடுகம் போன்ற அறநூல்களை பல்வேறு முறைகளில் பரப்புரை செய்து தமிழ்ப் பணியாற்றி வருகின்ற மாணவர்களை தமிழ் அறிஞர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
மேட்டுப்பாளையம் கம்பன் கழகம் தொடக்க விழாவில் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ், பட்டிமன்றப் பேச்சாளர்கள் பாரதிபாஸ்கர், மாது, சரவணன் உள்ளிட்ட பல தமிழ் ஆளுமைகள் கலந்து கொண்டனர்.

சமீபத்தில் திரிகடுகத்தில் திருக்குறள் என்ற பொருண்மையில் உலகச்சாதனை புரிந்து, பல்வேறு முறைகளில் தமிழ்ப்பணி ஆற்றி வருகின்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த திருக்குறள் தூதர் மதிப்புறு முனைவர் அ.ச.மலர்மிதா, 11ஆம் வகுப்பு, திருக்குறள் செம்மல் அ.ச.சாணக்யமித்ரன் மூன்றாம் வகுப்பு, திருக்குறள் செல்வி அ.ச.சங்கமித்ரா ஆறாம் வகுப்பு ஆகிய மூவரையும் தமிழ் அறிஞர்கள் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
திருக்குறளில் பல்வேறு உலகச் சாதனைகள் புரிந்து, ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் விச்சுவல் யூனிவர்சிட்டி புதுவை அமைப்பால் கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற திருக்குறள் தூதர் மலர்மிதா, தமிழக அரசு விருது உட்பட 100க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். சாணக்யமித்ரன் தமிழக அரசு நடத்திய திருக்குறள் முற்றோதல் நிகழ்வில் 1330 குறள்களையும் கூறி முடித்து, தற்போது திரிகடுகம் பாடல்கள் முழுவதையும் 16 நிமிடங்களில் கூறி உலக சாதனை புரிந்துள்ளார். சங்கமித்ரா அறக்கருத்துக்களை பரப்புரை செய்து வருகிறார்.
தொடர்ந்து தமிழ்ப் பணி ஆற்றி வரும் இம்மூவரின் திறமையையும் சாதனைகளையும் கண்ட பட்டிமன்றப் பேச்சாளர் பாரதிபாஸ்கர் , மூவரையும் வாழ்த்தி, சந்தன மாலை அணிவித்து பாராட்டினார். கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்கள் இவர்களைப் போன்ற மாணவர்கள்தான் அடுத்த தலைமுறைக்கு தமிழைக் கொண்டு செல்ல வேண்டும் என்றும், குறளும் தமிழும் உள்ளவரை உலகில் அமைதி நிலவும் என்றும் கூறி வாழ்த்தினார். மேலும் கோ.சரவணன், தலைவர் ஆறுமுகம், சுகுமார் மற்றும் பல தமிழ் அறிஞர்கள் மூவரையும் வாழ்த்தினர்.