கோவையில் ஒப்பந்தத்தை மீறி, போலி ஆவணங்கள் மூலம் வீட்டு மனைகளை விற்று மோசடி செய்த வழக்கில், ஜே.எம்.ஜே ஹவுசிங் நிறுவனம் ரூ.7.75 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும், மோசடியாகப் பதிவு செய்யப்பட்ட 10 கிரயப் பத்திரங்களை ரத்து செய்தும் தனி நடுவர் மன்ற நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
இந்த வழக்கின் விவரம் வருமாறு:-

கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் வி.ஆர்.எஸ். நடராஜன். இவரது நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ‘சாம்பியன் டெக்ஸ்டைல்ஸ்’ நிறுவனத்திற்குச் சொந்தமாக, கோவை மாவட்டம் சூலூர் தாலுகா பட்டணம் கிராமத்தில் சுமார் 2.04 ஏக்கர் பரப்பளவில் டி.டி.சி.பி அனுமதி பெற்ற 31 வீட்டு மனைகள் கொண்ட இடம் உள்ளது.
இந்த இடத்தில் வீடுகளைக் கட்டி விற்பனை செய்வதற்காக, கோவை ஆர்.எஸ். புரத்தைச் சேர்ந்த ‘ஜே.எம்.ஜே ஹவுசிங்’ நிறுவனத்தின் இயக்குனர் வில்சன் பி. தாமஸ் என்பவருடன் கடந்த 19.01.2022 அன்று கூட்டு ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி, மொத்த இடத்தில் 50 சதவீத பங்கான 15 மனைகளில் சாம்பியன் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்திற்கு 22,500 சதுர அடியில் இலவசமாக வீடுகளைக் கட்டித் தர வேண்டும் என்றும், மீதமுள்ள 16 மனைகளில் வீடுகளைக் கட்டி ஜே.எம்.ஜே நிறுவனம் விற்றுக்கொள்ளலாம் என்றும், எந்த ஒரு மனையையும் வீடு கட்டாமல் வெறும் காலி மனையாக விற்கக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது. இதற்காக ஜே.எம்.ஜே நிறுவனத்திற்கு பொது அதிகாரப் பத்திரமும் வழங்கப்பட்டது.
ஆனால், ஒப்பந்தப்படி 24 மாதங்களுக்குள் வீடுகளைக் கட்டித் தராமல் ஜே.எம்.ஜே நிறுவனம் காலம் தாழ்த்தி வந்தது. இதற்கிடையே, நில உரிமையாளரின் ஒப்புதல் இல்லாமல், விதிகளை மீறி 12 காலி மனைகளைத் தனது மனைவி ரீனி, நிறுவனத்தின் சக இயக்குனர் சிஜோ மற்றும் ஊழியர் பார்த்திபன் ஆகியோருக்கு மிகக் குறைந்த விலைக்கு வில்சன் பி. தாமஸ் பத்திரப்பதிவு செய்து கொடுத்தார்.
மேலும், இந்த பத்திரப்பதிவுக்காக சாம்பியன் டெக்ஸ்டைல்ஸ் நிர்வாக இயக்குனர் நடராஜனின் பெயரில் போலியான ‘லைப் சர்டிபிகேட் ‘ தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த மனைகள் மற்ற நபர்களுக்கு மறுவிற்பனை செய்யப்பட்டும், அடமானம் வைக்கப்பட்டும் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து நடராஜன் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் 2024 ஆம் ஆண்டு புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ஜே.எம்.ஜே ஹவுஸிங் உரிமையாளர் வில்சன் தாமஸ், அவரது மனைவி ரெனி, நிறுவனத்தின் இயக்குனர் சிஜோ மற்றும் மேனேஜர் பார்த்திபன் ஆகிய நான்கு பேர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

தொடர்ந்து சாம்பியன் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம்,ஜே.எம்.ஜே நிறுவனத்துடன் போடப்பட்டிருந்த உடனடியாக ஒப்பந்தத்தையும் பொது அதிகாரப் பத்திரத்தையும் ரத்து செய்தது. மேலும், சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில், இந்த வழக்கை விசாரிக்க ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி டி. ரவீந்திரன் தனி நடுவராக நியமிக்கப்பட்டார்.
சென்னை ஐகோர்ட்டு சமரச தீர்வு மையத்தில் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில், சாம்பியன் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன் ஆஜராகி வாதாடினார். அப்போது ஜே.எம்.ஜே நிறுவனம் சார்பில், “நிலத்தை மேம்படுத்த ரூ.1.65 கோடி செலவு செய்துள்ளோம், மேலும் நில உரிமையாளருக்கு ரூ.1 கோடி ரொக்கமாகக் கொடுத்துள்ளோம்” என்று கூறப்பட்டது. ஆனால், அதற்கான ஜி.எஸ்.டி கணக்குகளையோ, வங்கி ஆவணங்களையோ அவர்களால் நிரூபிக்க முடியவில்லை.
இருதரப்பு வாதங்களையும், ஆவணங்களையும் தீவிரமாக விசாரித்த ஓய்வுபெற்ற நீதிபதி டி. ரவீந்திரன் தனது 78 பக்க தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-
“ஜே.எம்.ஜே ஹவுசிங் நிறுவனம் கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படை விதிகளை அப்பட்டமாக மீறியுள்ளது. வீடுகளைக் கட்டி விற்காமல், போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கே காலி மனைகளாகப் பத்திரப்பதிவு செய்து கொடுத்தது சட்டவிரோதமானது. ஜே.எம்.ஜே நிறுவனம் ரூ.1 கோடி ரொக்கமாகக் கொடுத்ததாகக் கூறுவது நம்பும்படியாக இல்லை.
எனவே, ஜே.எம்.ஜே நிறுவனம் மற்றும் அதன் மூலம் மற்றவர்களுக்கு எழுதிக் கொடுக்கப்பட்ட 10 கிரயப் பத்திரங்களும் செல்லாது என அறிவித்து ரத்து செய்யப்படுகிறது. சம்பந்தப்பட்ட சொத்தை ஒரு மாத காலத்திற்குள் சாம்பியன் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
மேலும், ஒப்பந்தப்படி வீடுகளைக் கட்டித் தராமல் நம்பிக்கை மோசடி செய்ததற்காக ஜே.எம்.ஜே ஹவுசிங் நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர் வில்சன் பி. தாமஸ் ஆகியோர் கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ ரூ.6 கோடியே 75 லட்சம் நஷ்டஈட்டை 18 சதவீத வட்டியுடன் மனுதாரர் நிறுவனத்திற்கு வழங்க வேண்டும்.
அதேபோல், மோசடியால் மனுதாரர் நிறுவனத்திற்கு ஏற்பட்ட மிகுந்த மன உளைச்சல் மற்றும் பாதிப்புகளுக்கு ஈடாக மேலும் ரூ.1 கோடியை 18 சதவீத வட்டியுடன் நஷ்டஈடாக வழங்க வேண்டும். அத்துடன் வழக்குச் செலவுத் தொகையையும் எதிர்மனுதாரர்களே வழங்க வேண்டும்.”
இவ்வாறு நீதிபதி டி. ரவீந்திரன் தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார். கோவையில் ரியல் எஸ்டேட் ஒப்பந்தத்தை மீறி மோசடியில் ஈடுபட்ட நிறுவனத்திற்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *