சிவகங்கை மாவட்டத்தை  சேர்ந்தவர் கேசவபாண்டியன். இவர் ‘நேச்சர்ஸ் டச் குளோத்திங் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார். இவர் கடந்த 2024-ம் ஆண்டு கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசில் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில் அவர் திருச்செங்கோட்டில் உள்ள  சியூபி வங்கியில் பெற்ற கடனில், எனது கணக்கு வராக்கடனாக அறிவிக்கப்பட்டபோது நிலுவையில் இருந்த ரூ.3.50 கோடியில் ரூ.2 கோடி திருப்பிச் செலுத்தப்பட்டுவிட்டது. ஆனால், வங்கி அதிகாரிகள் எனக்குத் தெரியாமல் எனது கையெழுத்து மற்றும் எனது தந்தை முருகன், தாய் பொன்னுத்தாய், சகோதரர் அருண்பாண்டியன் ஆகியோரின் கையெழுத்துகளைப் போலியாகப் போட்டு கடன் ஒப்பந்தம், உத்தரவாத ஒப்பந்தம் உள்ளிட்ட ஆவணங்களைத் தயாரித்துள்ளனர்.

பின்னர் இந்த போலி ஆவணங்களை வைத்து கடன் தீர்ப்பாயத்தில் ரூ.5 கோடியே 8 லட்சத்து 9 ஆயிரத்து 959 கேட்டு பொய் வழக்கு தொடர்ந்து ஒருதலைப்பட்ச உத்தரவையும் பெற்றனர்.” மேலும், கடந்த 2015-16 காலகட்டத்தில் ரூ.45 கோடி மதிப்புடைய எங்களது 5 அடமான சொத்துக்களை, 2022-ல் வெறும் ரூ.1.40 கோடிக்கு அடிமாட்டு விலைக்கு ஏலம் விட்டு மெகா மோசடி செய்துள்ளனர். இதில் வெறும் ரூ.56 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட சொத்தை, ஏலம் எடுத்த அதே நிறுவனம் அடுத்த ஆண்டே இந்தியன் வங்கியில் அடமானம் வைத்து ரூ.20 கோடி கடன் பெற்றுள்ளது.” இவ்வாறு அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தப் புகாரின்பேரில் தீவிர விசாரணை நடத்திய கோவை மத்திய குற்றப்பிரிவு போலீசார், கடந்த 14-11-2024 அன்று சியூபி வங்கியின் கிளை மேலாளர் அரவிந்த், வங்கி மேலாளர் குஞ்சிதபாதம், உதவி மூத்த மேலாளர் கணேசன், மூத்த பொது மேலாளர் மகாராஜன், மண்டல வளர்ச்சி மேலாளர் சுயம்புலிங்கராஜா, வங்கி அதிகாரி ராமன் ஆகிய 6 பேர் மீது கூட்டுச்சதி, போலி ஆவணம் தயாரித்தல், மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இதனிடையே, இவ்வழக்கில் 5-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள மண்டல வளர்ச்சி மேலாளர் ஜி.சுயம்புலிங்கராஜா, தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் தடய அறிவியல் ஆய்விற்காக அசல் ஆவணங்களைச் சமர்ப்பிப்பதாகக் கூறிய வங்கித் தரப்பு, அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தவறியது.

மனுவை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி பிறப்பித்த உத்தரவில், “தணிக்கையாளர்களிடம் இருந்து தப்ப வாடிக்கையாளருக்குத் தெரியாமல் கூடுதல் கடன் காட்டி பழைய கடனை அடைத்தார்களா அல்லது ஆவணங்கள் போலியாகத் தயாரிக்கப்பட்டதா என்பது முழுமையான போலீஸ் விசாரணையில்தான் தெரியவரும். எனவே, வங்கி அதிகாரிக்கு வழங்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்குவதோடு, வழக்கை ரத்து செய்ய முடியாது” எனக்கூறி மனுவை முடித்து வைத்தார்.

வங்கி அதிகாரிகள் தொடர்ந்து நீதிமன்றங்களில் தடை கேட்டு மனுக்கள் தாக்கல் செய்து வந்ததால் போலீஸ் விசாரணை முடங்கியது. இதையடுத்து, குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிடக் கோரி புகார்தாரர் கேசவபாண்டியன் உயர் நீதிமன்றத்தில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கேசவபாண்டியனின் மனு குறித்து கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் 4 வாரங்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

வழக்குப்பதிவு செய்தும் இரண்டு ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த வழக்கு தற்போது நீதிமன்ற உத்தரவால் விரைவு படுத்தப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *