கோவை,

கோவையில் உரிமையாளர்கள் இல்லாத காலி இடங்களை நோட்டமிட்டு, அதில் கூடாரம் அமைத்து நிலங்களை அபகரிக்கும் புதிய மர்ம கும்பலின் நடமாட்டத்தால் பொதுமக்கள் மற்றும் நில உரிமையாளர்கள் கடும் அதிர்ச்சியும் பீதியும் அடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர் விஜயசேகர் (73). இவருக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள காலி மனை ஒன்று, கோவை பீளமேடு அடுத்த மசக்காளிபாளையம் காந்தி நகர் பகுதியில் உள்ளது. இந்த நிலையில், இன்று காலை விஜயசேகரின் நிலத்திற்குள் புகுந்த சில மர்ம நபர்கள், அங்கு அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வேலிகளை அதிரடியாக அகற்றியுள்ளனர். பின்னர், அந்த இடத்திற்குள் அத்துமீறி நுழைந்து கூடாரங்களை அமைக்கத் தொடங்கினர்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப் பகுதி குடியிருப்புவாசி ஒருவர், உடனடியாக நிலத்தின் உரிமையாளரான விஜயசேகருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். தகவலைக் கேட்டு பதறியடித்தபடி உடுமலைப்பேட்டையில் இருந்து கோவைக்கு விரைந்து வந்த விஜயசேகர், தனது நிலத்தைப் பார்த்து உறைந்து போனார்.

அங்கு 10-க்கும் மேற்பட்ட பெண்கள் அத்துமீறி நுழைந்து, கூடாரம் அமைத்து தங்கியிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த விஜயசேகர், அந்தப் பெண்களிடம் சென்று, “இது எனது இடம், ஏன் அத்துமீறி நுழைந்தீர்கள்?” என்று கேட்டுள்ளார். அதற்கு அந்தப் பெண்கள், சற்றும் பயமின்றி, “இந்த இடம் எங்களுக்குத்தான் சொந்தம்” என்று கூறி அவரிடமே வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதையடுத்து, அந்தப் பகுதியில் விஜயசேகர் சுற்றிப் பார்த்தபோது மேலும் ஒரு திடுக்கிடும் உண்மை வெளிவந்தது. அதே பகுதியில் இதேபோல காலியாக உள்ள 6-க்கும் மேற்பட்ட நிலங்களை இந்த மர்ம கும்பல் குறிவைத்துள்ளது தெரியவந்தது. அந்த இடங்களிலும் தலா 5 முதல் 10 பெண்கள் வரை கூடாரம் அமைத்து ஆக்கிரமிப்பு செய்திருப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

நிலைமை விபரீதமாவதை உணர்ந்த விஜயசேகர், உடனடியாக இதுகுறித்து போலீஸ் கண்ட்ரோல் ரூமிற்கு தகவல் தெரிவித்தார் .தகவலின் பேரில் ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது, விஜயசேகர் தனது நிலத்தின் அசல் ஆவணங்கள் மற்றும் பட்டா உள்ளிட்ட ஆதாரங்களை போலீசாரிடம் காண்பித்தார்.

தொடர்ந்து, அங்கு கூடாரம் அமைத்து நிலத்தை அபகரிக்க முயன்ற பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் போலீசாரையே திசைதிருப்பும் நோக்கில், “எங்களது வழக்கறிஞர் சென்னையில் இருக்கிறார். அவர் நாளை ஆவணங்களுடன் கோவைக்கு வந்துவிடுவார்” என்று கூறி நாடகமாடினர்.

இதையடுத்து, சுற்றியிருந்த குடியிருப்பு வாசிகளை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பொதுமக்கள், “இந்தக் கும்பலுக்கும் இந்த இடங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவர்கள் யார் என்றே எங்களுக்குத் தெரியாது. இன்று காலையில்தான் திடீரென வந்து கூடாரம் அமைத்தார்கள்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

நிலத்தின் உரிமையாளரான விஜயசேகர் அருகில் உள்ள உடுமலைப்பேட்டையில் இருந்ததால், உடனடியாக நேரில் வந்து போலீசில் புகார் அளித்துவிட்டார். ஆனால், மற்ற 6 காலி இடங்களின் உரிமையாளர்கள் வெளியூர்களிலும், வெளிநாடுகளிலும் இருப்பதால் அவர்கள் இன்னும் வரவில்லை. இதனைப் பயன்படுத்திக் கொண்ட மர்ம கும்பல், அந்த இடங்களை முழுமையாக ஆக்கிரமித்து கூடாரங்களுக்குள் தங்கியுள்ளது.

கடந்த மாதமும் கோவையின் முக்கியப் பகுதியான கொடிசியா வளாகம் அருகே, இதே பாணியில் ஒரு கும்பல் பல்வேறு காலி நிலங்களில் திடீரென கூடாரம் அமைத்து நிலங்களை அபகரிக்க முயன்றது  பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், நில உரிமையாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து, அந்தக் கும்பல் அங்கிருந்து மூட்டைக் கட்டிக்கொண்டு ஓட்டம் பிடித்தது.

தற்போது பீளமேட்டில் புகுந்துள்ள கும்பலுக்கும், கடந்த மாதம் கொடிசியாவில் நிலத்தை அபகரிக்க முயன்ற கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா? அல்லது அதே கும்பல்தான் தற்போது மசக்காளிபாளையம் பகுதிக்கு இடம் பெயர்ந்து ஆக்கிரமிப்பு வேட்டையில் ஈடுபட்டு வருகிறதா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் இந்த “கூடாரம் அமைத்து நிலம் அபகரிக்கும்” புதிய பாணி மோசடி கும்பலால், காலி மனை வைத்துள்ள உரிமையாளர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *