
கோவை துடியலூர் ரயில் நிலையம் அருகே வெள்ளக்கிணர் அரசு ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் விஜயராணி என்பவர் கோவை- மேட்டுப்பாளையம் பயணிகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
கோவை வெள்ளக்கிணர் அரசு ஆரம்பப்பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளவர் விஜயராணி(53). இவர் வெள்ளக்கிணர் பகுதியில் குடியிருந்து வருகிறார். இவருக்கு திருமணமான 2 மகள்கள் உள்ளனர்.
இன்று பள்ளிக்கு விடுமுறை என்ற நிலையில் தனது இருசக்கர வாகனத்தில் துடியலூர் ரயில் நிலையம் அருகே வந்த அவர் இரு சக்கர வாகனத்தை அங்கு நிறுத்திவிட்டு மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி வந்த பயணிகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதை பார்த்த ரயில் ஓட்டுநர் அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த மேட்டுப்பாளையம் ரயில்வே போலீசார் தற்கொலை செய்து கொண்ட தலைமை ஆசிரியர் விஜயராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமாய் என தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.