கோவையில் இன்று பட்டாசு வெடித்து,
இனிப்பு வழங்கி ரஜினி பிறந்தநாள் கொண்டாட்டம்

கோவை,
தமிழகத்தில் இன்று நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் விழா அவரது ரசிகர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கோவை மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் அதன் நிர்வாகிகள் கடந்த 3 நாட்களாக ரஜினிகாந்த் பிறந்தநாள் விழாவை கொண்டாடி வருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை கோவையில் பாபா படம் வெளியான தியேட்டர்கள் முன்பு மாவட்ட நிர்வாகி சத்தியமூர்த்தி தலைமையிலான ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இதனை தொடர்ந்து நேற்று 200 ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் 200 ரசிகர்களை அவர் பாபா படத்திற்கு அழைத்துச் சென்றார். அப்போது பட இடைவெளியில் அந்த 200 குழந்தைகளுக்கும் ரசிகர்களுக்கும் அவர் தின்பண்டங்களை வாங்கி கொடுத்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ரஜினி பிறந்த நாளான இன்று சலிவன் வீதியில் உள்ள ஆஞ்சநேயர், ராகவேந்திரா கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடன் வாழ சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகளை நடத்தினர். மேலும் கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், தன்வந்திரி ஹோமம் உள்பட பல்வேறு ஹோமங்களை நடத்தினர். இதனைத் தொடர்ந்து கோவில் முன்பு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
மாலை ஆர். எஸ். புரம் ரத்தின விநாயகர் கோவிலில் 108 தேங்காய்களை உடைத்து வழிபட்டனர். பின்னர் கோட்டை ஈஸ்வரன் சங்கமேஸ்வரர் கோவிலில் சங்கபிஷேகம் நடத்தினர். கோவையில் உள்ள அனைத்து கோவில்களிலும் 73 கிலோ இனிப்புகளை வாங்கி பக்தர்களுக்கும், பொது மக்களுக்கும் வழங்கினர்.