கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு:
கைதான 6 பேர் சென்னை புழல் ஜெயிலுக்கு மாற்றம்

கோவை,
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த அக்டோபர் 23-ந் தேதி கார் குண்டு வெடித்தது. இதில் உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் உயிரிழந்தான்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், ஜமேஷா முபின் பயங்கரவாத செயலை அரங்கேற்ற திட்டமிட்டதும், அதில் அவரே சிக்கி இறந்ததும் தெரியவந்தது.
மேலும் இதில் தொடர்புடையதாக முகமது தல்கா, முகமது அசாரூதீன், பெரோஸ் இஸ்மாயில், அப்சர்கான், முகமது ரியாஸ், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களை காவலில் எடுத்தும் விசாரித்து விட்டு, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
தற்போது இந்த வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி வருகிறது. கைதானவர்களிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்தனர். பின்னர் அவர்களை சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டிலும் ஆஜர்படுத்தி, மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக தீவிர விசாரணை நடத்த வேண்டி இருப்பதால், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 6 பேரையும், சென்னை புழல் ஜெயிலுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சில நாட்களாக ஈடுபட்டு வந்தனர்.
பணிகள் அனைத்தும் முடிந்ததை தொடர்ந்து இன்று மதியம் கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் உள்ள 6 பேரையும், வேனில் ஏற்றி பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களை புழல் ஜெயிலில் அடைக்கின்றனர். பின்னர் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.