அழுகிய நிலையில் கல்லூரி மாணவரின் உடல் மீட்பு

கோவை,
திருச்சி திருவெறும்பூரை சேர்ந்த பரம தயாளன் என்பவர் மகன் ஆகாஷ் (வயது 20). இவர் கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ., ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் முதலில் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். பின்னர் தனது பெற்றோரிடம் கல்லூரி விடுதியில் தங்க விருப்பம் இல்லை. எனவே வெளியே அறை எடுத்து தரும்படி கேட்டார். இதனையடுத்து அவரது பெற்றோர் ஆகாசுக்கு கோல்டு வின்ஸ் இந்திரா நகரில் அறை எடுத்து கொடுத்தனர். அங்கு தங்கி இருந்து ஆகாஷ் கல்லூரிக்கு சென்று வந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவரது செல்போனுக்கு பெற்றோர் தொடர்பு கொண்டனர். ஆனால் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. தொடர்ந்து அவர்கள் முயற்சி செய்தனர். ஆனால் போன் தொடர்ந்து சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அறை உரிமையாளரை தொடர்பு கொண்டு அறைக்கு சென்று பார்க்கும்படி கூறினர். உடனடியாக அறை உரிமையாளர் சென்று பார்த்த போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. மேலும் அறையில் இருந்து தூர்நாற்றம் வந்தது. இதனையடுத்து அறை உரிமையாளர் இது குறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ஆகாஷ் அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்கினார். அவர் தற்கொலை செய்து 3 நாட்கள் இருக்கும் என்பதால் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. பிணத்தை பீளமேடு போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவர் ஆகாஷ் தற்கொலை செய்து கொண்டதற்காக காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.