சாலையோரம் பாட்டிலில் இருந்த தண்ணீரை குடித்த பெண் பலி

கோவை,
கோவை கிணத்துகடவை சேர்ந்தவர் வசந்தி (வயது 36). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது சித்தி மஞ்சுளா (48) என்பவருடன் சூலூர் பாப்பம்பட்டி பிரிவு பஸ் நிலையத்தில் விளம்பர நோட்டீசுகளை பொதுமக்களுக்கு விநியோகம் செய்து கொண்டு இருந்தார். அப்போது மஞ்சுளாவிற்கு தண்ணீர் தாகம் எடுத்தது. இதனால் தண்ணீர் கிடைக்குமா என அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தார். அங்கு ரோட்டோரம் ஒரு தண்ணீர் பாட்டில் இருந்தது. அதனை பார்த்த அவர் அதனை எடுத்து குடித்தார். பின்னர் தனது வேலையை செய்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவருக்கு தலை சுற்றல் ஏற்பட்டது. உடனே வசந்தியை அழைத்து தனக்கு உடல் நிலை முடியவில்லை என்றார்.
அவர் மஞ்சுளாவை அழைத்து கொண்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் அவர் குடித்த நீரில் விஷத்தன்மை இருந்தது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.