கர்ப்பிணி பெண்ணுக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் மருத்துவ நிபுணர்

கோவை,
கோவை கருமத்தம்பட்டி அடுத்த சென்னியாண்டவர் கோவில் பகுதியை சேர்ந்தவர் கைலாஷ். இவரின் மனைவி பேபிதேவி(23). இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இவருக்கு நேற்றிரவு வீட்டில் இருக்கும்பொழுது பனிக்குடம் உடைந்தது. இதனால் மிகுந்த வலியுடன் துடித்தார். இதை பார்த்த அவரது கணவர் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து கருமத்தம்பட்டி பகுதியில் இருந்து ஆம்புலன்ஸ் விரைந்து வந்தது. அவருடைய வீட்டிற்கு வந்து பார்த்தபோது பேபிதேவிக்கு பிரசவ வலி அதிகரித்து குழந்தையின் தலை வெளியே வந்தது.
இதனால் ஆம்புலன்ஸ் மருத்துவ நிபுணர் முருகன் அவருடைய வீட்டிலேயே பைலட் பாண்டி உதவியுடன் இளம்ெபண்ணுக்கு பிரசவம் பார்த்தார். அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது இதையடுத்து சோமனூர் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக தாய், சேய் இருவரையும் சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர் இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தார்.