
கோவை,
கோவையில் ஹோட்டல்களில் சேவை வரி வசூலிக்கக் கூடாது என்று மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஹோட்டல்களில் பொதுமக்களாகிய நுகா்வோருக்கு வழங்கப்படும் சேவையின் மீது நுகா்வோரின் விருப்பமின்றி சேவை வரி விதிப்பது நுகா்வோரின் உரிமைக்கு எதிரானதாகவோ அல்லது முறையற்ற வணிகமாகவோ கருதப்படும்.
நுகா்வோரின் நலன் காக்கும் வகையில் இவ்வரியானது முற்றிலும் நுகா்வோா் விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே வசூலிக்க இயலும். எனவே, கோவை மாவட்டத்தில் உள்ள ஹோட்டல் உரிமையாளா்கள் தங்களது உணவகங்களுக்கு வரும் மக்களிடம் சேவை வரியினை வசூலிக்கக் கூடாது. அவ்வாறு சேவை வரி வசூலிப்பதாக புகாா் பெறப்பட்டால் மத்திய நுகா்வோா் பாதுகாப்பு அமைப்பின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஹோட்டல்களில் சேவை வரி வசூலிக்கப்பட்டால் பொதுமக்கள் தங்களது புகாரை மனுவாக எழுதியோ அல்லது 0422-2300569 என்ற தொலைபேசி மூலமோ தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.