
கோவையில் கஞ்சா போதையில் இருந்த பள்ளி மாணவனை சக நண்பர்கள் தாக்கியதில் பரிதாபமாக இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சரவணம்பட்டி பெரிய வீதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி ஜீவா தம்பதியினர். இவர்களது மகன் விமல் ( 18) காளப்பட்டி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி மாணவன் விமலுக்கு கஞ்சா மற்றும் போதை மாத்திரை பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் விமல் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி பள்ளிக்கு சரியாக செல்லாமல் இருந்துள்ளான். இந்நிலையில் நேற்று கஞ்சா போதையில் தான் படிக்கும் பள்ளிக்கு அருகில் உள்ள நூலகத்தின் முன்பு அதிக போதையில் விமல் படுத்து உள்ளான் .இதனைக் கண்ட அவனது நண்பர்கள் சூரிய பிரகாஷ், ராபர்ட் உள்ளிட்டோர் விமலை எழுந்து வீட்டுக்கு செல்லுமாறு வற்புறுத்தி உள்ளனர்.இதனால் போதையில் இருந்த விமலுக்கும் அவனது சக நண்பர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டது. அப் போது நண்பர்கள் கைகளாலும், மம்பட்டி பிடியாலும் தாக்கியதால் போதையில் இருந்த விமலுக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் அங்கிருந்த சிலர் விமலை மீட்டு சரவணம்பட்டியில் உள்ள விமல் ஜோதி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.அங்கு மருத்துவர்கள் பரிசோதித்த போது விமல் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து விமலின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் .மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைை வைத்து வைத்து மாணவனை தாக்கிய நண்பர்கள் சூரிய பிரகாஷ்் ராபர்ட் உட்பட சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.