
கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக தேர்வு செய்யப்பட்ட தி.மு.க வைச் சேர்ந்த கல்பனா ராஜினாமா செய்தார்.உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகரில் தி.மு.க அமோக வெற்றியை பெற்றது. அப்போதைய பொறுப்பு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் சிபாரிசின் பேரில் கல்பனா ஆனந்தகுமார் மேயரானார். முன்னதாக சென்னைக்கு பேருந்தில் சென்று தமிழகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தார். ஆனால் பதவி ஏற்றது முதல் கல்பனா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. மாநகராட்சி அதிகாரிகளுடனும், ஒப்பந்ததாரர்களுடனும் கல்பனா மோதல் போக்கை கடைபிடித்து வந்ததாக அமைச்சர் கே.என்.நேருவிடமும் புகார் அளிக்கப்பட்டது.இது மட்டுமில்லாமல் கல்பனாவின் குடும்பத்தார், தொல்லை செய்வதாக சரண்யா என்ற பெண் புகார் கூறி, அதன் ஆதாரங்களையும் வெளியிட்டார். இதனால் கட்சி தலைமை கல்பனா மீது அதிருப்தி அடைந்தது. இந்த சூழலில் அவரிடம் ராஜினாமா கடிதம் பெற்றதாக தகவல் வெளியானது. இதனிடையே உடல்நலத்தை காரணம்காட்டி மேயர் ராஜினாமா செய்ததாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.தான் ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை மாநகராட்சி ஆணையரிடம் கல்பனா வேறு ஒருவர் மூலமாக கொடுத்து உள்ளார்.