கோவையில் 12 மணிக்குள் புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்துக் கொள்ள வேண்டும் : போலீஸ் புதிய கட்டுப்பாடு

கோவை,

2023ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களை நள்ளிரவு 12 மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என்று போலீசார் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.

புத்தாண்டை வரவேற்கும் வகையில் கோவையில் உள்ள சுமாா் 120 தனியாா் தங்கும் விடுதிகளிலும், 10 நட்சத்திர விடுதிகளிலும் பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான முன்பதிவும் ஏற்கெனவே தொடங்கப்பட்டுவிட்டது. இந்நிலையில், போலீஸ் சாா்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதில் இன்று சனிக்கிழமை இரவு 10 மணிக்கு மேல் கோவை மாநகரில் உள்ள அனைத்து மேம்பாலங்களும் மூடப்பட்டு, வாகனப் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இரவு முழுவதும் போக்குவரத்து சிக்னல்கள் இயங்கும், பாதுகாப்புப் பணிகளில் 1,500 போலீஸாா் ஈடுபடுவாா்கள், மது போதையில் வாகனங்களை இயக்குவோா், வாகனங்களில் சாகசங்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மாநகர போலீஸ் கமிஷனர் வே.பாலகிருஷ்ணன் விதித்துள்ளாா்.

அதேபோல, தனியாா் தங்கும் விடுதிகளைப் பொறுத்தவரையில் இரவு 1 மணி வரையிலும் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவா்கள் நள்ளிரவு 12 மணிக்குள் நிகழ்ச்சிகளை முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்போா் சட்டவிரோதமாக போதைப் பொருள்களை பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும், கேளிக்கை நிகழ்ச்சிகளின்போது கண்காணிப்பு கேமராக்கள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும், பெண் பாதுகாவலா்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இன்று  போலீசாருடன்  இணைந்து சுகாதாரத் துறையினரும் புத்தாண்டு இரவுப் பணியில் ஈடுபடுகின்றனா். இதற்காக கோவை மாநகரில் உள்ள 15 போலீஸ் ஸ்டேஷனில்  சனிக்கிழமை இரவு 9 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி வரை சிறப்பு மருத்துவ மையங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவையில் ராமநாதபுரம் சந்திப்பு, டி.பி. சாலை சந்திப்பு, புரூக்பீல்டு, வடகோவை, அவிநாசி சாலை, கொடிசியா, கோவைப்புதூா் ஆகிய பகுதிகளில் இந்த சிறப்பு மருத்துவ மையங்கள் செயல்படும். விபத்துகளில் சிக்குவோா், மதுபோதையில் வாகனங்களை ஓட்டுவோா் உள்ளிட்டோருக்கு மருத்துவ உதவி அளிக்கும் வகையில் இந்த சிறப்பு மருத்துவ மையங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.