அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி

கோவை,
தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் சார்பில் உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பிசியோ அரைஸ் – 2022 பிசியோதெரபி மருத்துவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்றது. விழாவிற்கு தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க மாநில தலைவர் டாக்டர்.ராஜா செல்வகுமார் வரவேற்புரை வழங்கினார்.
தமிழக மின்சார துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சென்னையை சேர்ந்த டாக்டர்.ஜெகதீசனுக்கு அப்துல் கலாம் விருதும் டாக்டர்.ரகுநாத்துக்கு இளம் சாதனையாளர் விருதும் கன்னியாகுமரியை சேர்ந்த டாக்டர். ஆல்ட்ரின் பினோவுக்கு சிறந்த பிசியோதெரபி மருத்துவர் விருதும் பல்வேறு பிசியோதெரபி கல்லூரி முதல்வர்களுக்கு அங்கீகார விருதுகளையும் வழங்கினார். தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி பிசியோதெரபி மருத்துவர் பணி மகத்தானது. அர்ப்பணிப்புடன் கூடிய பிசியோதெரபி மருத்துவரின் நீண்ட நாள் கோரிக்கையான வட்டார மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிசியோதெரபி பிரிவு துவக்கப்படும் என்ற கோரிக்கையும் காப்பீட்டு திட்டத்தில் பிசியோதெரபி சிகிச்சையை சேர்க்க வேண்டும் என்பதும் ஆகும். அதேபோல அரசு கல்லூரிகள் பிசியோதெரபி பாடத்திட்டத்தை துவக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். திமுக ஆட்சி அமைந்து 15 மாத காலத்தில் தேர்தலின் போது அளிக்கப்பட்ட 70% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த வாக்குறுதிகளில் பிசியோதெரபி சங்கத்தின் கோரிக்கையும் உள்ளது. அதை நிச்சயம் நிறைவேற்றி தர முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்றார். விழாவிற்கு தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் டாக்டர்.ராஜேஸ் கண்ணா நன்றியுரை வழங்கினார்.இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் டாக்டர்.சுகன்யா தேவி மற்றும் டாக்டர்.மஞ்சுளா செய்திருந்தனர்.