போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு

கோவை,பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் என போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த மிரட்டல் கடிதம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த குமரன் நகர் பகுதியில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்து முன்னணி ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளின் வாகனங்கள் கடந்த 22 ஆம் தேதி சேதப்படுத்தப்பட்டது. ஒரு சில வாகனங்களின் மீது டீசல் பாக்கெட்டுகளுக்கு சம்பவமும் நடைபெற்றது. இதை அடுத்து வழக்கு பதிவு செய்த போலிசார் மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய சிலரை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று பொள்ளாச்சி மேற்கு போலீசாருக்கு மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது.
அதில் பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் அல்லது கையெறி குண்டு வீசப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் காவல்துறை எங்களுக்கு எதிரி அல்ல சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த வேண்டும் என எஸ்டிபிஐ குமரன் நகர் என எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த கடிதத்தில் யார் அனுப்பியது என்ற விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படாமல் போலீஸ் ஸ்டேஷனுக்கு தபாலில் வந்துள்ளது. இது குறித்து தீவிரமாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .இது குறித்து கோவை மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் கூறும்போது பொள்ளாச்சி மேற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த கடிதம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் வாகனங்களை சேதப்படுத்திய வழக்கில் இருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார் .ஏற்கனவே தமிழகமெங்கும் இந்து அமைப்புகள் மற்றும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் அலுவலகங்களில் வீடுகள், வாகனங்களின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் சற்றே ஓய்ந்து உள்ள நிலையில் மீண்டும் 16 இடங்களில் குண்டு வீசப்படும் என வந்துள்ள மிரட்டல் கடிதம் போலீசார் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.