மரங்களை வெட்ட சொன்ன கவுன்சிலர் பொதுமக்கள் புகார்

கோவை,

கோவை ஒண்டிப்புதுாரில், 20 வருட பழமையான நான்கு மரங்கள், குப்பை வண்டி வந்து செல்வதற்கு இடையூறாக இருப்பதாக கூறி, வெட்டப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கோவை மாநகராட்சி 56வது வார்டு, ஒண்டிப்புதுார் பகுதியில்  ரயில்வே டிராக் அருகில்  எம்.ஆர்.ஆர். லே அவுட் அமைந்துள்ளது. இப்பகுதியில், 20 ஆண்டுகள் பழமையான கொன்றை மரங்கள் இரண்டு மற்றும் 15 ஆண்டுகள் பழமையான வேம்பு மற்றும் மகிழம்பூ மரங்கள் இருந்தன.இந்நிலையில், நேற்றுமுன்தினம் இம்மரங்கள், திடீரென வெட்டப்பட்டதை கண்டு குடியிருப்புவாசிகள் அதிர்ச்சியடைந்தனர்.குடியிருப்புவாசி ஒருவர் கூறுகையில், ‘என் வீட்டின் முன்புதான், இந்த மரங்கள் இருந்தன. யாரை கேட்டு வெட்டுகிறீர்கள் என்று கேட்டதற்கு, கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்திதான் வெட்ட சொன்னார் என்றனர். உண்மையில், இதே பகுதியில், தனியார் கம்பெனி நடத்தி வரும் ஒருவர், தன் கம்பெனிக்கு கனரக வாகனங்கள் வந்து செல்வதற்கு இடையூறாக இருப்பதாக மரங்களை வெட்டியுள்ளார். முறையான அனுமதி பெறாமல், குடியிருப்புவாசிகளிடம் தகவலும் தெரிவிக்காமல் மரங்களை வெட்டியவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.ஒண்டிப்புதுார் தாசில்தார் சரண்யாவிடம் கேட்டபோது, சம்பந்தப்பட்ட இடத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆய்வு செய்துள்ளனர். இதற்கு கவுன்சிலர்தான் காரணம் என, ரிப்போர்ட் பெறப்பட்டுள்ளது. கவுன்சிலரிடம் கேட்டதற்கு, ‘ஆமாம் நான்தான் வெட்ட சொன்னேன், குப்பை வண்டி வந்து செல்ல இடையூறாக இருக்கிறது’ எனக் கூறினார். ஆனால், மரம் வெட்டியதற்கு எவ்வித அனுமதியும் பெறவில்லை. இதற்காக, கவுன்சிலருக்கு ஆர்.டி.ஓ.,மூலமாக அபராதம் விதிக்கப்படும்,” என்றார்.