கோவை,
கோவை பீளமேடு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை மிரட்டும் வகையில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.இதுகுறித்து பீளமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பாலாஜி உத்தம ராமசாமியை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். அவரது கைதை கண்டித்து 100க்கும் மேற்பட்ட பாஜக-வினர் போராட்டம் நடத்தினர். அவர்களும் கைது செய்யபபட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் பாஜக மாவட்ட தலைவர் மற்றும் கட்சியினர் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவை சிவானந்தா காலனியில் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக காவல்துறையினரிடம் அனுமதி கேட்டு மனு அளித்தனர்.
இந்த நிலையில் கோவையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை காரணமாகவும், பதட்டத்தை தணிக்கவும் பாஜக-வினரின் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் இன்று திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடக்குமா என்று பாஜகவினர் இடையே சந்தேகம் ஏற்பட்டது .இதனிடையே கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில், பாஜக சார்பாக நாளை நடத்தப்படவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு சட்டம் – ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி போலீஸ் அனுமதி மறுத்துள்ளது. போராட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே எதற்காக காவல்துறையினர் பயப்படுகிறார்கள்.பாஜக தொண்டர்கள் இதுவரை களத்தில் இறங்கவில்லை. பெட்ரோல் குண்டு வீசிக் கொண்டே இருப்பவர்களை, நாங்கள் பார்த்துக்கொண்டே இருக்க மாட்டோம். அறப்போராட்டம் என்று தெரிவித்துள்ளோம். சட்டத்தை சட்டமாக பார்க்க வேண்டும். நிபந்தனைகளுடன் அனுமதி வழங்குங்கள். எவ்வித பிரச்சினையும் இல்லாமல் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார். இதனால் இன்று மாலை 4 மணிக்கு கோவை சிவானந்தா காலனியில் பாஜக சார்பில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசினார்.