உலக பிசியோதெரபி தின விருது வழங்கும் விழா

கோவை,
1996 ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8 தேதி உலக பிசியோதெரபி தினமான அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு மூட்டு நோய் வராமல் தடுக்கும் பிசியோதெரபி வழிமுறைகள் மற்றும் மூட்டு நோய் பாதிப்பிலிருந்து மீண்டு வர உதவும் பிசியோதெரபி மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அனுசரிக்கப்படுகிறது.


தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இந்த மாதம் பிசியோதெரபி விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்பட்டு பொது மக்களுக்கு பிசியோதெரபி மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்திவருகிறது.
இதன் தொடர்ச்சியாக கோவை மண்டல அறிவியல் மையம் மற்றும் அறிவியல் அருங்காட்சியகத்தில் உலக பிசியோதெரபி தின விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க மாநில தலைவர் டாக்டர்.ராஜா செல்வகுமார் வரவேற்புரை வழங்கினார்.
மாண்புமிகு தமிழக மின்சார துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சென்னையை சேர்ந்த டாக்டர்.ஜெகதீசனுக்கு அப்துல் கலாம் விருதும் டாக்டர்.ரகுநாத்துக்கு இளம் சாதனையாளர் விருதும் கன்யாகுமரி மை சேர்ந்த டாக்டர். ஆல்ட்ரின் பினோக்கு சிறந்த பிசியோதெரபி மருத்துவர் விருதும் பல்வேறு பிசியோதெரபி கல்லூரி முதல்வர்களுக்கு அங்கிகார விருதுகளையும் வழங்கி கௌரவித்து வாழ்த்துரை வழங்கினர்.

இறுதியில் தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் டாக்டர்.ராஜேஸ் கண்ணா நன்றியுரை வழங்கினார்.இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் டாக்டர்.சுகன்யா தேவி மற்றும் டாக்டர்.மஞ்சுளா அவர்கள் செய்திருந்தனர்.
இவ்விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிசியோதெரபி சங்க மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள்,பிசியோதெரபி மருத்துவர்கள் , கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள்,மாணவ, மாணவிகள் உள்பட சுமார் 1000 பேர் கலந்து கொண்டனர்.விருது வழங்கும் விழாவை தொடர்ந்து பிசியோதெரபி மருத்துவ கருத்தரங்கு மற்றும் மாநில அளவிலான கலை மற்றும் அறிவியல் போட்டி நடைபெற்றது.
விழா முடிந்ததும் அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் எதற்காக கைது செய்யப்பட்டார்கள் என்பதை பார்க்க வேண்டும். சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பிரச்சனை செய்தவர்களையே போலீசார் கைது செய்துள்ளனர். கோவையில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மக்கள் அமைதியை விரும்புகின்றனர். பதட்ட நிலையை ஏற்படுத்த வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.