எலி மருந்து தின்றவர்களை இனி  காப்பாற்ற கோவை அரசு மருத்துவமனையில் நவீன கருவி 

கோவை,கோவை அரசு மருத்துவமனை டீன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:

எலி மருந்து சாப்பிடுவதால் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலை உண்டாகிறது. அதில் உள்ள மஞ்சள் பாஸ்பரசானது தோல். குடல், மூச்சுக்குழல் ஆகியவற்றில் உள்ள திசுக்களால் உறிஞ்சப்பட்டு அது இதயம், சிறுநீரகங்கள், கல்லீரல் உள்ளிட்டவற்றிற்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. இதன்காரணமாக இதில் அதிகளவு உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதையடுத்து எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயல்பவர்களுக்கு சிகிச்சை அளிக்க தமிழக அரசு சில வரைமுறைகளை வகுத்து உள்ளது.

இதன்படி தற்கொலை செய்யும் எண்ணத்துடனோ அல்லது தவறுதலாகவோ எலிமருந்தை நின்றால் அந்த நபர்களுக்கு முதற்கட்டமாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது நகர்ப்புற சுகாதார நிலையங்களில் சிகிச்சை அளிக்கப்படும். அதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக தலைமை அரசு ஆஸ்பத்திரி அல்லது மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க பிரத்யேசு கருவி வழங் கப்பட்டு உள்ளது. இதன்படி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிளாஸ்மா எக்ஸ்சேஞ்ச் கருவி வழங்கப்பட்டு உள்ளது.

இந்த பிரத்யேக கருவி மூலம் எலி மருந்து விஷத்தினால் பாதிக்கப்பட்ட நபரின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை அகற்றி விட்டு அதற்கு பதிலாக புதிய பிளாஸ்மா செலுத்தப்படும். இது ஒரே நபருக்கு தொடர்ந்து 3 முறை நாட்களுக்கு செய்யப்படும். இதன்காரணமாக எலி மருந்தை தின்றவர்களில் உயிர் பிழைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இந்த பிளாஸ்மா மாற்று சிகிச்சையினால் கோவையில் உயிரிழப்புகள் குறைந்து உள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை 42 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு இந்த நவீன கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டதில் 33 பேர் உயிர் பிழைத்து உள்ளனர். பிற நோயாளிகள் காலம் தாழ்த்தி மிகவும் மோசமான நிலையில் வந்த தால் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.