
கோவை,
கோவை அம்மன்குளம் பகுதியில் ஒரே கழிப்பறையில் இரண்டு பேர் அமர்ந்து பயன்படுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ள மாநகராட்சி டூயல் டாய்லெட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அம்மன் குளம் பகுதியில் மாநகராட்சி பொதுக் கழிப்பறை
உள்ளது. இந்த கழிப்பறையானது பெண்கள் மற்றும் ஆண்கள் பயன்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கழிவறையின் ஒரு பகுதியில் இரண்டு பேர் அருகருகே அமர்ந்து பயன்படுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ள கட்டுமானம் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.
2 கழிவறைகள் அருகருகே அமைக்கப்பட்டுள்ள நிலையில், கழிவறைக்கு இடையிலே கதவுகளோ அல்லது தடுப்புகளோ கட்டப்படாதது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இருவர் அடுத்தடுத்து அமரும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த கழிவறை குழந்தைகளுக்காக கட்டப்பட்டது என்றாலும் கதவுகள் இல்லாமல் கட்டப்பட்டு இருப்பதால் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள்
தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் ஒரே அறையில் இரு கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த கழிப்பறை மாநகராட்சி நிர்வாகத்தால் கட்டப்பட்டு பல ஆண்டுகளாகி இருந்தாலும் தற்போது இந்த புகைப்படம் கோவையில் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.