
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து தினசரி ஊட்டிக்கு மலை ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது.கடந்த சில வாரங்களாக மலை ரயில் பாதை அமைந்துள்ள வன பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் கல்லாறு-ஹில்கிரோவ் மலை ரெயில் பாதையில் மன்சரிவு ஏற்பட்டது. பாறைகள், மண் விழுந்து மலை ரயில் தன்டவாளங்கள் சேதமடைந்தன. இதனால் ரயில் போக்குவரத்தை தென்னக ரயில்வே நிர்வாகம் கடந்த 2 நாட்களாக நிறுத்தியது. தொடர்ந்து 15-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் சேதமடைந்த பகுதிகளை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வந்தனர். இதனையடுத்து 2 நாட்களாக நடந்த சீரமைப்பு பணிகள் நிறைவடைந்தது. இந்தநிலையில் இன்று வழக்கம் போல் மலை ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் புறப்பட்டு சென்றது. காலை 7.40 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுடன் மலை ரயில் குன்னூர் புறப்பட்டு சென்றது. 2 நாட்களுக்கு பின் ரெயில் இயக்கப்பட்டதால் முன்பதிவு செய்து காத்திருந்த பயணிகள் மகிழ்ச்சியுடன் மலை ரயிலில் பயணித்தனர்.