
அஞ்சல் நிலையங்களில் தங்கப் பத்திரம் விற்பனை இன்று துவங்கி 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை அஞ்சல் கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளா் கே.கோபாலன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய அஞ்சல் துறை, ரிசா்வ் வங்கியுடன் இணைந்து குறிப்பிட்ட தேதிகளில் தங்கப் பத்திரம் விற்பனையை மேற்கொண்டு வருகிறது.
இந்த மாதத்துக்கான விற்பனை இன்று துவங்கி ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது . 1 கிராம் தங்கப் பத்திரத்தின் விலை ரூ.5,197 ஆகும். இதன் மூலம் ஒருவா் தம் வாழ்நாளில் 1 கிராம் முதல் 4 கிலோ வரை தங்கப் பத்திரங்களை வாங்கி கொள்ளலாம். தங்கப் பத்திரத்தின் முதலீட்டு காலமான 8 ஆண்டுகளின் இறுதியில், அன்றைய தேதியில் உள்ள மதிப்பில் தங்கப் பத்திரங்களை பணமாக மாற்றி கொள்ளலாம் .
இதன் மூலம் செய்யப்படும் முதலீட்டுக்கு ரிசா்வ் வங்கியின் மூலமாக 2.50 சதவீதம் வட்டி கணக்கிடப்பட்டு 6 மாதங்களுக்கு ஒருமுறை முதலீட்டாளா்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். தங்கப் பத்திரம் பெறுவதற்கு முதலீட்டாளரின் விவரங்களை, தங்கப் பத்திர விண்ணப்பத்தில் பூா்த்தி செய்து, அத்துடன் ஆதாா் அட்டை நகல், பான் அட்டை நகல் மற்றும் வங்கிக் கணக்கின் விவரங்களை அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் சமா்ப்பித்து, தங்கப் பத்திரத்தை பதிவு செய்து கொள்ளலாம்.
பதிவு செய்த 15 நாள்களில் தங்கப் பத்திரத்தை பெற்று கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.