
கோவை: கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கைத்தறி கூடங்கள் மற்றும் நூற்பாலைகள் ஏராளமாக செயல்பட்டு வருகிறது. கைத்தறி கூடங்கள் மற்றும் நூற்பாலைகளுக்கு முக்கிய மூலப்பொருளாக விளங்கும் பஞ்சு விலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கேண்டி (365 கிலோ) பஞ்சுவிலை ரூ.1 லட்சத்ைத தாண்டி வரலாறு படைத்தது. அதன் பின்னர் மத்திய அரசு பஞ்சு இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரியை முற்றிலும் நீக்கியது. இதனால் பஞ்சு விலை குறைய தொடங்கியது. கடந்த ஜூலை மாதத்தில் ஒரு கேண்டி விலை ரூ. 85 ஆயிரமாக குறைந்தது. தற்போது மீண்டும் படிப்படியாக உயர்ந்து ஒரு கேண்டி பஞ்சு விலை ரூ.1 லட்சத்தை எட்டி உள்ளது. மிக குறுகிய காலகட்டத்தில் ஒரு கேண்டி பஞ்சு விலை ரூ.18 ஆயிரம் உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றத்தால் ஒரு கிலோ நூல் உற்பத்திக்கு ரூ. 40 முதல் 50 வரை நஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டியது உள்ளது. இதனால் குறு, சிறு என பல நூற்பாலைகள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்த பஞ்சு விலை உயர்வுக்கு யூகத்தின் அடிப்படை மற்றும் வர்த்தகர்கள் தான் முக்கிய காரணம் என கூறப்படுகிறது. இது குறித்து நூற்பாலை உரிமையாளர்கள் கூறிய தாவது:-பல்பொருட்கள் பரிமாற்றம் தளத்திலிருந்து பஞ்சை நீக்க வேண்டும். சீனாவில் உள்ளதை போல எக்காரணம் கொண்டும் பஞ்சு கொள்முதல் செய்யும்உரிமையை பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்க கூடாது. ஆண்டு முழுவதும் நியாயமான விலையில் தேவைக்கேற்ப உள்நாட்டு மார்க்கெட்டில் பஞ்சு கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். உள்நாட்டு தேவைக்கு பஞ்சு வழங்கிய பின் மட்டுமே ஏற்றுமதிக்கு அனுமதிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை குறு, சிறு நூற்பாலைகள் மூடப்படுவதி லிருந்து பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.