
கோவையில், மாணவர்களின் படிப்புக்கு கல்வி உதவித்தொகை வாங்கித்தருவதாக கூறி, மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கும்பகோணம் தேவனாச்சேரியை சேர்ந்தவர் ரவிக்குமார்,( 47). லோடுமேன் ஆக பணிபுரிந்து வருகிறார். பிளஸ் 2 முடித்த இவரது மகனை, கல்லுாரியில் சேர்ப்பதற்கு பண உதவி கிடைத்தால் வசதியாக இருக்கும் என்று எண்ணியிருந்தார்.அந்த சமயத்தில் கோவை டாடாபாத் 4 ஆம் வீதியில் செயல்பட்ட, பெஸ்ட் பியூச்சர் எஜூகேஷனல் டிரஸ்ட் சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதாக வந்த, விளம்பரத்தை பார்த்து தொடர்பு கொண்டார். அந்த டிரஸ்ட் நடத்திய செல்வம், ‘ஒரிஜினல் கல்விச்சான்றுகளை கொடுத்தால் ஸ்காலர்ஷிப் ஏற்பாடு செய்கிறேன்’ என்று உறுதி அளித்தார். அதன்படி, தன் மகனுடைய கல்விச்சான்றிதழ்களை ஒப்படைத்தார்.கல்வி சான்றிதழ்களை வாங்கிக்கொண்ட செல்வம், கல்வி உதவித்தொகைக்கு ஏற்பாடு செய்யவில்லை. சான்றிதழ்களையும் திருப்பி தரவில்லை. இதை எடுத்து ரவிக்குமார் கல்வி உதவி தொகை தரவில்லை என்றாலும் பரவாயில்லை ஒரிஜினல் சான்றிதழ்களை திருப்பித் தாருங்கள் என பலமுறை கேட்டு வந்தார். ஆனால் செல்வம் திருப்பி தரவில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவிக்குமார் அலுவலகத்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து ரத்தினபுரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.புகாரின்படி, ரத்தினபுரி எஸ்.ஐ., ஆரோக்கிய தனசீலன் விசாரணை நடத்தினார். தொடர்ந்து தலைமறைவாக இருந்த செல்வம்( 48) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 85 பேருடைய கல்விச்சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அனைவருக்கும் கல்வி உதவித்தொகை பெற்றுத்தருவதாக, இத்தனை பேரிடமும் சான்றிதழ்களை வாங்கி வைத்திருப்பதும், ஒவ்வொருவரிடமும் பணம் வாங்கியிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் செல்வம் சிறையில் அடைக்கப்பட்டார்.