
கோவை : கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில், நேற்று இரவு மின் கசிவால் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
கோவை ஒசூர் சாலையில் மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகம் உள்ளது. இங்கு உள்ள பழைய கட்டடத்தில் உள்ள ஒரு அறையில், சுகாதார பணிக்கு பயன்படுத்தும், பிளீச்சிங் பவுடர், பைல்கள் உள்ளிட்ட பொருட்கள் வைக்கும், குடோன் உள்ளது.இந்த குடோனில், நேற்று இரவு மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. பிளீச்சிங் பவுடர் மூட்டை மற்றும் பைல்களில் தீ பரவியது. ரசாயன நாற்றத்துடன் புகை வெளியேறியது.
தகவல் அறிந்த தெற்கு தீயணைப்பு நிலைய உதவி அதிகாரி அழகர்சாமி தலைமையில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.பிளீச்சிங் பவுடர் மூட்டைகளில் தீப்பற்றியதால் ஏற்பட்ட புகையால், தீயணைப்பு பணியில் ஈடுபட்ட, வீரர்கள் கார்த்தி மாயன், சுரேஷ் பாபு, வெங்கடேஷ், கோவிந்தராஜ் மற்றும் பாபு ஆகிய ஐந்து தீணைப்பு வீரர்களுக்கு மூச்சுத்திணறல், இருமல், வாந்தி ஏற்பட்டது. அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பட்டனர்.