
கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் பகுதியில் கோவை, பொள்ளாச்சி, நீலகிரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்பேசிய அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், “கரூரில் இருந்து ஒருவர் கோவைக்கு வந்து போட்டியிடுகிறார். அவர் திமுக மற்றும் திமுக வேட்பாளர் பெயரை சொல்கிறார். ஆனால் எனது பெயரை சொல்ல மறுக்கிறார். புரட்சி தலைவி வைத்த புரட்சி தலைவரின் பெயர் என்பதால் எனது பெயரை சொல்ல பயமா? அண்ணாமலை கரூரில் நின்றால், டெபாசிட் கிடைக்காது என்பதால் கோவையில் வந்து நிற்கிறார்.
ஒரு கரூர்காரர் ஜெயிலில் இருக்கிறார். அவர் வெளியே வர இன்னொரு கரூர்காரரை ஜெயிக்க வைக்க டம்மி வேட்பாளரை நிறுத்தியுள்ளார்கள் என வாட்ஸ்அப்பில் வந்தது. அது உண்மையா எனத் தெரியவில்லை.
நாடாளுமன்றத்தில் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு என எந்த மொழியிலும் பேச தயார். அண்ணாமலை பயப்படுகிறார். என்னை பயப்படுவதாக நினைத்து விடக்கூடாது. அவருக்கு சவால் விடுகிறேன். என்னுடன் கோவையின் வளர்ச்சி குறித்து பேச தயாரா? நேரம், இடத்தை குறித்து வாருங்கள். விவாதிக்க நான் தயார்.
அதிமுக தொண்டர்களின் உணர்வை புண்படுத்திய அண்ணாமலை, வேலுமணி கோட்டையில் வந்து நின்றால் ஜெயிக்க விட்டு விடுவோமா?” எனத் தெரிவித்தார்.