கோவை: லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிடுவதா? கூட்டணி அமைத்து போட்டியிடுவதா என்பது குறித்து கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது கோவையில் மீண்டும் போட்டியிடப்போவதாக கூறியுள்ளார்.கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கினார் கமல்ஹாசன். கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கட்சியை தொடங்கினார் கமல் ஹாசன். கட்சி தொடங்கிய அடுத்த ஆண்டே 2019ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் மக்கள் நீதிமய்யம் தனித்து போட்டியிட்டு 3.7 சதவிகித வாக்குகளைப் பெற்றது.2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் சரத்குமார், பாரிவேந்தர் கட்சியுடன் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிட்டது மக்கள் நீதி மய்யம். முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் கமல் ஹாசன். சட்டசபைத் தேர்தலில் படு தோல்வியை சந்தித்தது மநீம. வாக்கு சதவிகிதமும் 2.5 ஆக சரிந்தது.சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியில் இருந்த முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகினர். இதனையடுத்து கட்சி மேலும் பலவீனமானது. இதனையடுத்து மக்கள் நீதி மய்யம் 2.0 என்று புதிய நிர்வாகிகளை அறிவித்தார் கமல். கட்சியை ஒரு பக்கம் கவனித்தாலும், சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வந்தார் கமல் ஹாசன்.இன்னும் சில நாட்களில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்க உள்ள நிலையில் கமல்ஹாசன் தனது நிர்வாகிகளுடன் கோவையில் ஆலோசனை மேற்கொண்டார். லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளன. 100 நாட்களுக்கு கமல்ஹாசன் டிவி நிகழ்ச்சியில் பிஸியாகி விடுவார் இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கோவை மண்டல நிர்வாகிகளுடன் அவர் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.ஆலோசனைக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். அப்போது பேசிய கமல்ஹாசன், கோவையில் பெரும் ஆதரவு இருப்பதாக கூறிய கமல்ஹாசன், லோக்சபா தேர்தலில் தான் போட்டியிடுவேன் என்று கூறினார். 40 தொகுதிகளிலும் தொண்டர்கள் போட்டியிட தயராக இருக்க வேண்டும் என்று நிர்வாகிகள் மத்தியில் கமல்ஹாசன் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *