ஈஷா யோகா பயிற்சிக்கு வந்த பெண் மன அழுத்தம் காரணமாக தற்கொலையா?

கோவை,
திருப்பூரை சேர்ந்தவர் பழனிகுமார். பனியன் தொழிலாளி. இவரது மனைவி சுபஸ்ரீ(வயது 34). சுபஸ்ரீ 7 நாள் யோகா பயிற்சிக்காக கடந்த மாதம் 11-ந் தேதி கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு வந்தார். 7 நாள் பயிற்சி முடிந்ததும், அவரை அழைத்து செல்வதற்காக பழனிகுமார் கடந்த 18-ந் தேதி பயிற்சி மையத்திற்கு வந்து காத்திருந்தார். ஆனால் நீண்ட நேரமாகியும் மனைவி வரவில்லை. இதுகுறித்து அவர் அங்குள்ளவர்களிடம் விசாரித்தபோது, அனைவரும் சென்று விட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து பழனிகுமார் தனது மனைவியை கண்டுபிடித்து தர கோரி ஆலாந்துறை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 தனிப்படை அமைத்து சுபஸ்ரீயை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று ஆலாந்துறை அடுத்த செம்மேடு பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் இருந்து சுபஸ்ரீ சடலமாக மீட்கப்பட்டார். போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவரது கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் விசாரித்தனர். அப்போது அவரது கணவர் எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. எனது மனைவி கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்தார். அதில் இருந்து மீள்வதற்காகவே யோகா பயிற்சிக்கு இங்கு வந்ததாக தெரிவித்தார். இதற்கிடையே சுபஸ்ரீயின் உடல் சிறப்பு மருத்துவர் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவரது முகம் முழுவதும் சிதைந்து இருந்தது. மேலும் நுரையீரலிலும் அதிகளவில் தண்ணீர் இருந்துள்ளது. இதன் காரணமாகவே அவர் இறந்துள்ளதாகவும், கிணற்றில் குதித்தபோது அங்கிருந்த பாறைகள் அல்லது மோட்டார் மீது முகம் மோதி காயம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதற்கிடையே கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட சுபஸ்ரீ ரோட்டில் ஓடுவது போன்ற வீடியோ காட்சிகள் சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர். அதில் யோகா பயிற்சி மேற்கொள்ள வந்த சுபஸ்ரீ சம்பவத்தன்று மையத்தை விட்டு வெளியே வருகிறார். வெளியேறியதும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த அவர் திடீரென வேகமாக ஓடுவது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. மேலும் அந்த வழியாக வந்த கால் டாக்சியை மறித்து ஏறி செல்வதும் பதிவாகி இருந்தது. இதையடுத்து அந்த காரின் எண்ணை வைத்து கார் டிரைவரை பிடித்து விசாரித்தனர். அவர் நான் அந்த வழியாக வந்து கொண்டிருந்ததாகவும், அப்போது அந்த பெண் லிப்ட் கேட்டதால் காரில் ஏற்றினேன். செம்மேடு பகுதியில் வந்ததும் காரை நிறுத்த சொல்லிவிட்டு அவர் வேகமாக இறங்கி ஓடிவிட்டார் எனவும் தெரிவித்தார். யாராவது அவரை துரத்தி வந்தால் பயந்து ஓடுகிறார் என்று நினைக்கலாம். ஆனால் அவரின் பின்னால் யாரும் வருவது போன்ற காட்சிகள் சி.சி.டி.வியில் பதிவாகவில்லை. இதனால் மன அழுத்தம் காரணமாக அவர் ரோட்டில் ஓடி இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். மேலும் காரை விட்டு இறங்கிய அந்த பெண், அந்த வழியாக சென்ற ஒருவரின் செல்போனை வாங்கி கணவரை தொடர்பு கொண்டதாகவும், ஆனால் கணவர் எடுக்காததால் போனை கொடுத்து விட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. அதன்பிறகே அவர் தற்கொலை முடிவை எடுத்து இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இதற்கிடையே சுபஸ்ரீயின் உடலை அவரது கணவர் பெற்றுக் கொண்டார். பின்னர் உடல் நஞ்சுண்டாபுரம் மின் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு தகனம் செய்யப்பட்டது.