போலீஸ்காரர்கள் 2 பேர் வீடுகளில் 66 பவுன் நகை – ரூ.84 ஆயிரம் கொள்ளை

கோவை,கோவை அடுத்த கோவைப்புதூரை சேர்ந்தவர் லூர்துசாமி என்பவரின் மகன் ஜான் சேவியர் (46). இவர் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக வேலை செய்து வருகிறார்.இவரது மனைவி எஸ்தர் (41). இவரும் கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை செய்து வருகிறார். இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கபிலன் .இவர் சிறப்பு காவல்படையில் போலீஸ்காரராக வேலை செய்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜான் சேவியர் மற்றும் அவரது மனைவி எஸ்தர் வீட்டை பூட்டிவிட்டு புத்தாண்டு பிரார்த்தனைக்காக சர்ச்சுக்கு சென்றனர். கபிலனும் வீட்டை பூட்டி வெளியே சென்றார்.பின்னர் சர்ச்சில் இருந்து ஜான் சேவியரும் அவரது மனைவியும் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.உள்ளே சென்று பார்த்த போது அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 38¾ பவுன் தங்க நகை மற்றும் ரூ.9 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. சிறிது நேரத்தில் கபிலனும் வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்தது.அவரது வீட்டில் 27½ பவுன் தங்க நகை, ரூ.75 ஆயிரம் திருட்டு போயிருந்தது. கபிலன் தனது வீட்டிலும் கொள்ளை போயிருப்பதை ஜான் சேவியரிடம் கூறினார். பின்னர் இதுகுறித்து ஜான் சேவியர் மற்றும் கபிலனும் குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் 2 வீடுகளிலும் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இதையடுத்து போலீசார் ஜான் சேவியர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் அந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். அடுத்தடுத்த 2 போலீஸ்காரர்களின் வீடுகளில் 66¼ பவுன் நகை மற்றும் ரூ.84 ஆயிரம் கொள்ளை போன சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.