
கோவை,
கோவை பீளமேட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவித்தல் மற்றும் தமிழ் மன்றம் தொடக்க விழா, கோவை அரசு ஆஸ்பத்திரியில் புனரமை க்கப்பட்ட கட்டிடங்கள், மேட்டுப்பாளையம் மற்றும் சூலூர் அரசு ஆஸ்பத்திரியில் கூடுதலாக கட்டப்பட்ட கட்டிடங்கள், ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலைய கட்டிடங்கள் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு த்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டார். விழா முடிந்த பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை, ஊரக உள்ளாட்சித் துறை, நகர்புற உள்ளாட்சி அமைப்பு ஆகிய துறைகள் ஒன்று சேர்ந்து அமைச்சர்கள் மற்றும் செயலர்களுடன் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் மாவட்ட வாரியாக இணைப்பு குழுக்களை ஏற்படுத்தி, ஒருங்கிணைப்பு குழு மூலம் மாவட்டம் தோறும் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் கடந்த 5 மாதங்களுக்கு முன்பாகவே தமிழக முதல்-அமைச்சர் வழிகாட்டுதலின்படி ஏற்படுத்தப்பட்டது. அதன் விளைவாக பெரிய அளவிலான வெள்ள பாதிப்புகள் இல்லை.டெங்கு, மலேரியா போன்ற பருவநிலை காலங்களில் வருகின்ற நோய் பாதிப்புகள் இல்லை. வடகிழக்கு பருவமழை முடியும் தருவாயில் புயல் அறிவிப்பு வந்துள்ளது. இன்று இரவு கரை கடக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த புயலால் சென்னை உள்பட 7 மாவட்டங்கள் பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது.சென்னையில் இன்றும், நாளையும் பூங்காக்கள் மூடி வைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி மற்றும் சேவை துறையை சேர்ந்த அதிகாரிகள் 24 மணி நேர பணியில் இருக்கும் படி உத்தரவிடப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் மருந்துகள் மருத்துவ உபகரணங்கள் களப்பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை உள்பட புயல் எச்சரிக்கை விடுக்கப்ப ட்டுள்ள அனைத்து மாவட்ட–ங்களிலும் துணை சுகாதார நிலையம் தொடங்கப்பட்டு மருந்துகள், களப்பணியாளர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் இருந்து வந்த மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. உக்ரைன் நாட்டில் அவர்கள் படித்த பாடப்பிரிவு வேறு எந்த நாட்டில் இருக்கிறதோ அங்கு படிக்க தயார் என்ற கருத்துக்களை மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளோம். இது தொடர்பாக தொடர்ந்து மத்திய அரசிடமும் வலியுறுத்தி வருகிறோம். மக்களை தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி தொடங்கப்பட்டது. தற்போது அந்த திட்டம் 90 லட்சத்தை கடந்து 98 லட்சத்து 84 ஆயிரத்து 395 பேர் என்கிற அளவில் உள்ளது. ஒரு கோடி என்பது 8 நாட்களில் நிறைவு பெறும். ஒரு கோடியாவது பயனாளி நிறைவு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் கலந்து கொள்வார். போதுமான மருத்துவ வசதி இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிகமாக உள்ளது. அரசு ஆஸ்பத்திரி கட்டிடப் பணிகள்3 மாதத்திற்கு முடிக்கப்பட்டு பயன்பாட்டு கொண்டு வரப்படும். தங்கி இருந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுடன் வருபவர்கள் தங்கி இருக்க காத்திருப்பார் அறை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.