கே.எஸ்.அழகிரி கோவை நிகழ்ச்சிகள் திடீர் ரத்து

கோவை:
தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பச்சைமுத்து மகன் திருமண விழா இன்று கோவையில் நடந்தது. இதில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி கலந்து கொள்வதாக இருந்தது. மேலும் கருமத்தம்பட்டி அருகில் வினோபா நகரில் நடக்கும் கட்சி நிகழ்ச்சியிலும் கே.எஸ். அழகிரி பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த 2 நிகழ்ச்சிகள் முடிந்து அவர் திருப்பூர் மாவட்டம் செல்வார் எனவும் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவை, திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் உற்சாகம் அடைந்து அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு இருந்தது. காங்கிரஸ் கட்சி கொடிகளும், பேனர்களும் முக்கிய சந்திப்புகளில் கட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் கே.எஸ்.அழகிரியின் கோவை வருகை திடீரென ரத்து செய்யப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் கட்சியினரும், நிர்வாகிகளும் ஏமாற்றம் அடைந்தனர். இதுகுறித்து நிர்வாகிகளிடம் கேட்டபோது, கே.எஸ்.அழகிரியின் மனைவிக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் அவரது கோவை வருகை ரத்து செய்யப்பட்டு விட்டது. மற்றபடி வேறு எந்த காரணமும் இல்லை என தெரிவித்தனர்.