கோவை,

கோவையில் திமுக கவுன்சிலர்   பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வீட்டின் முன்பாக இருந்த மரக்கன்றுகளை முறித்து வீசி அராஜகத்தில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகராட்சி 34 வது வார்டு கவுன்சிலராக  பதவி வகித்து வருபவர் திமுக வை சேர்ந்த மாலதி. இவர் மாநகராட்சி கல்வி குழு தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். இவர் கவுண்டம்பாளையம் பி என் டி காலனி ராஜன் நகர் பகுதியில் வசித்து வருகிறார்.இவரது வீட்டிலிருந்து சுமார் 10 வீடு தள்ளி வசித்து வருபவர் சுபாஷ்.இந்த நிலையில் சுபாஷின் வீட்டின் முன்பாக அவர் நான்கு வேப்பமரக்கன்றுகளை வைத்து வளர்த்து வருகிறார்.சுமார் 10 அடி உயரம் வரை வேப்ப மரக்கன்றுகள் வளர்ந்த சூழலில் அங்கு கார் நிறுத்துவதற்கு இடையூறாக இருப்பதாக கூறி கவுன்சிலர் மாலதி அந்த மரக்கன்றுகளை அப்புறப்படுத்துமாறு கூறிவந்துள்ளார். ஆனால் சுபாஷ் அந்த மரக்கன்றுகளை அப்புறப்படுத்தாமல் இருந்துள்ளார். இந்நிலையில்  இன்று காலை நைட்டியுடன்  அங்கு வந்த கவுன்சிலர்  மாலதி மரக்கன்றுகளை நட்ட  சுபாஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அவர்  மரக்கன்றுகளை முறித்து வீசி எறிந்தார். தொடர்ந்து  ஆவேசமடைந்த மாலதி மரக்கன்றுகள் முறித்தது தொடர்பாக யாரிடம் வேண்டுமானாலும் புகார் கொடு… யாரை வேண்டுமானாலும் அழைத்து வந்து பார் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியபடியே அங்கிருந்து சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சில நபர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது கோவையில் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாநகராட்சியில் கவுன்சிலராக மட்டுமல்லாமல் கல்வி குழு தலைவராக பொறுப்பு வகித்து வருபவர் மரக்கன்றுகளை வீசி எறிந்து அராஜகத்தை ஈடுபட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.