கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை வெள்ளிகுப்பம்பாளையம் பகுதியில் இரு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.ஏற்கனவே இந்த இரு மதுபான கடையில் ஒரு கடையின் பாரில் நுழைந்து கேஷியரை சரமாரி வெட்டிக்கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த நிலையில் மற்றொரு கடையான டாஸ்மாக் கடை எண் 1810 ல் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருபவர் ஊட்டியை சேர்ந்த விஜய் ஆனந்த்.இவர் நேற்று மதியம் வழக்கம் போல் கடையில் விற்பனையான கலெக்சன் பணத்தை எடுத்துக்கொண்டு மேட்டுப்பாளையம் இந்தியன் வங்கிக்கு டெபாசிட் செய்ய ஆலாங்கொம்பு வழியாக சென்றுள்ளார்.
அப்போது,அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவர் மீது மோதுவது போல் வந்து கீழே விழச்செய்துள்ளனர்.
அவர் கீழே விழுந்த நேரம் இரு டூவீலர்களில் வந்த மர்ம நபர்கள் பட்டாகத்தியுடன் அவரிடம் இருந்து பணம் வைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனத்தை பறிக்க முயன்றுள்ளனர்.
இதனை பார்த்த அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் பயத்தில் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
ஒருகட்டத்தில் மக்கள் கூடவே சூப்பர்வைசரை பட்டாக்கத்தியால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்து விட்டு தாங்கள் வந்த டூவீலர்களில் அப்பகுதியில் இருந்து தப்பிச்சென்றுள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோன்று கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இதே சூப்பர்வைசரை மேட்டுப்பாளையம் இந்தியன் வங்கி அருகிலேயே கத்தியால் குத்தி விட்டு பணம் பறிக்க முயன்ற சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.இந்த சம்பவ வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.