கோவை,

தாய்மொழி முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் டாக்டர் பா.சிவசக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

கோவையில் தீபாவளி பண்டிகைக்கு முந்தைய தினம் கார் வெடித்த சம்பவம் நடைபெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கோவையில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பது பற்றிய ஒரு வெள்ளை அறிக்கையை மத்திய மாநில அரசுகள் வெளியிட வேண்டும்.

இது குண்டுவெடிப்பா அல்லது தற்செயலாக நடந்த செயலா என்பது பற்றி உடனடியாக விசாரணை நடத்தி மாநில அரசு மக்களுக்கு விளக்க வேண்டும்.இது தனிப்பட்ட நபரோ அல்லது அமைப்பு சார்ந்த பிரச்சினை அல்ல. இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கோவை மாவட்டம்  லட்சக்கணக்கான சிறு குறு மற்றும் பெரிய தொழிற் சாலைகளையும் கொண்டுள்ளது .இதை நம்பி பலகோடி தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன்பெற்று வருகிறார்கள். மேலும் அண்டை மாநிலங்களான கேரளா ,கர்நாடகம் மட்டுமின்றி வட இந்தியாவில் உள்ள பெரும்பாலான  மக்கள் கோவையை நம்பி உள்ளார்கள்.

இவர்கள் தங்கள் தேவைக்காகவும் தொழிலுக்காகவும் கோவை மாவட்டத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் கோவை மாவட்டமானது இந்திய மற்றும் தமிழக பொருளாதாரத்தில் பெரிய அளவு வருவாய் தந்து வருகிறது.

தொடர்ந்து பதட்டமான நிலையில் கோவை இருந்து வந்தால் பல நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு கம்பெனிகள் கோவை விட்டு வெளியேறக்கூடிய அபாயத்தை ஏற்படுத்தி விடும். இதனால் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் நேரடியாகவும் பாதிக்கப்படுவார்கள்.

இதனால், மாநில அரசின் வருவாய் கள் பாதிக்கப்படும்.

எனவே மாநில அரசு மற்றும் மத்திய அரசு உடனடியாக நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்து இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாத வண்ணம் மீண்டும் கோவையில் அமைதி நிலவ பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.