கொடுத்த பணத்தை திருப்பி தராத இளம் பெண்ணுக்கு வெட்டு:மீன் வியாபாரி கைது

கோவை,

கோவை சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த டிரைவர் சுதாகர் என்பவரது மனைவி தீபிகா (29). இவர் சத்தி ரோட்டில் உள்ள ப்ரோசோன் மாலில் பணிபுரிந்து  வருகிறார் . இவரது கணவர் சுதாகரின் நண்பர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த பால்துரை என்பவரது மகன் ஜெயக்குமார் (50). இவர் கடந்த 8 ஆண்டுகளாக  போத்தனூர் அவ்வை நகரில் தனது மனைவி ஜெப சித்ரா மற்றும் மகன் ,மகளுடன் வசித்து வருகிறார் .இவர் இருசக்கர வாகனத்தில் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் சரவணம்பட்டி எல்ஜிபி நகரைச் சேர்ந்த சுதாகர் அவரது மனைவி தீபிகா ஆகியோருக்கு வழக்கமாக மீன் வியாபாரம் செய்து வந்த நிலையில் சுதாகருக்கும் ஜெய்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சுதாகர் மனைவி தீபிகா மீன் வியாபாரி ஜெயக்குமாரிடம் அவ்வப்போது தனது தேவைக்காக பணம் வாங்கியுள்ளார். சுமார் 40 ஆயிரம் ரூபாய்  வரை பணத்தை கடன் வாங்கி உள்ளார் .கணவன் மனைவி இருவரிடம் உள்ள பழக்கத்தின் காரணமாக மீன் வியாபாரி ஜெயக்குமாரும் பணத்தை கொடுத்துள்ளார். இந்நிலையில் கொடுத்த பணத்தை ஜெயக்குமார் தீபிகாவிடம் திருப்பி கேட்டுள்ளார். பலமுறை கேட்டும் பணத்தை தராத தீபிகா நேற்று தனது இருசக்கர வாகனத்தில் வழக்கம்போல் பணிக்கு சென்றுள்ளார். அப்போது தீபிகாவை வழிமறித்த ஜெயக்குமார் தன்னிடம் வாங்கிய பணத்தை தருமாறு தீபிகாவிடம் கேட்டுள்ளார் .அப்போது தீபிகாவுக்கும் ஜெயக்குமாருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது.  தகராறு முற்றிய நிலையில் ஆத்திரம்  அடைந்த ஜெயக்குமார் தான் வைத்திருந்த மீன் வெட்டும் கத்தியை எடுத்து தீபிகாவை கைகள் மற்றும் மார்பு பகுதியில் வெட்டி உள்ளார். இதில் பலத்த ரத்தக்காயங்களுடன் நிலைகுலைந்த தீபிகாவை சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து தீபிகா அளித்த புகாரின் அடிப்படையில் சரவணம்பட்டி காவல் துறையினர் மீன் வியாபாரி ஜெயக்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .போக்குவரத்து அதிகம் உள்ள சத்தி சாலையில் பெண்ணை கத்தியால் வெட்டிய  சம்பவம் அப்பகுதி பொதுமக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.