கோவை,

கோவை  ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யாவு. ஆடிட்டரான  இவருடைய அலுவலகத்தில் கோவையைச் சேர்ந்த ரேவதி என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் வேலை செய்து வந்தார். இந்நிலையில் அய்யாவு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அய்யாவுவின் அலுவலக பணிகள் மற்றும் பணம் பரிவர்த்தனைகளை அனைத்தையும் ரேவதி கவனித்து வந்தார் . இந்நிலையில் ரேவதி அய்யாவுவின் வங்கி கணக்கில் இருந்து அவ்வப் போது 10, 15 ஆயிரம் என பல்வேறு தவணைகளில் பணத்தை எடுத்து அதை தனது கணவர் தினேஷ் என்பவரின் வங்கி கணக்கு மாற்றி உள்ளார்.

இவர் அலுவலக விஷயமாக அடிக்கடி பண பரிவர்தனை செய்யும் போது அய்யாவுவின் செல்போன் எண்ணுக்கு ஒரு முறை பயன்படுத்தும்  ஓ.டி.பி வரும் ஆனால் அலுவலக ரீதியாக பணத்தை பரிவர்த்தனை செய்வதாக கூறி ஓ.டி.பி எண்ணை பெற்று பணத்தை மாற்றி உள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அய்யாவு தனது அலுவலகத்திற்கு சென்று கணக்குகளை ஆய்வு செய்த போது கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ரேவதி அய்யாவு கணக்கில் இருந்து ரூபாய் 26 லட்சம் எடுத்து மோசடி செய்தது தெரிய வந்தது. இது குறித்து அவரிடம் கேட்டதற்கு சரியான பதில் அளிக்கவில்லை. எனவே இது குறித்து அய்யாவு ஆர்.எஸ்.புரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். புகாரின் பேரில்  போலீசார் வழக்கு பதிவு செய்து தம்பதியான தினேஷ், ரேவதி ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.