பஸ்சில் ஏற முயன்ற கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு

கோவை,
கோவை கணபதி காமராஜபுரம் 2-வது வீதியைச் சேர்ந்தவர் சரவணவேல் (வயது 18). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தை இவர் தனது நண்பரும், கல்லூரி மாணவருமான தேவா என்பவருடன் கணபதி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த தனியார் பஸ்சில் ஏற முயன்றார். அப்போது பஸ்சில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் சரவணவேல் மற்றும் அவரது நண்பர் தேவாவை பஸ்சில் ஏற விடாமல் கீழே தள்ளினர். அப்போது அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட மோதலில் 6 பேரும் சேர்ந்து சரவணன் வேலை தாக்கினர். இதனைப் பார்த்த தேவா அவர்களை தடுக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் தேவாவை அரிவாளால் வெட்டினர். பின்னர் மிரட்டி விட்டு சென்றனர். இதில் காயம் அடைந்த 2 பேரும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர் சிகிச்சை அளித்து வருகிறார். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.