கோவை,சமூக வலைத்தளத்தில் தற்போது ஏராளமான ஆப்கள் உள்ளன. இந்த ஆப்கள் மூலம் பெண்களிடம் நண்பர்களாக பழகி அவர்களின் போட்டோவை பெற்று. அதை ஆபாச போட்டோவாக சித்தரித்து அதை காட்டி மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் கோவை மாநகர பகுதியை சேர்ந்த பெண்கள் சிலர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர், அந்த புகாரில், எங்களிடம் நண்பர்களாக ஒருவர் பழகி, எங்களின் போட்டோவை  பெற்று, அதை ஆபாச படமாக மாற்றி, பணம் கொடுக்க வேண்டும் இல்லை என்றால் அந்த புகைப்படத்தை வாட்ஸ்-அப், முகநூல், இன்ஸ்டாகிராம் உள்பட சமூக வலைத்தளத்தில் பதிவேற் றம் செய்துவிடுவதாக மிரட்டி வருகிறார். எனவே அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் அருண் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் பெண்களை மிரட்டி பணம் பறித்த நபர்  விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள கூமப்பட் டியை சேர்ந்த பரமசிவம் (28) என்பதும், அவர் என்ஜினீயர் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

அதில் அவர் யோயோ என்ற செயலி மூலம் பெண்களிடம் நண்பர்களாக பழகி உள்ளார். அதில் ஒவ்வொரு பெண்களுக்கும் பிரண்ட் ரிக்குவஸ்ட் கொடுக்கும்போது அதில் தனது போட்டோவுக்கு  பதிலாக அழகான ஆண்களின் போட்டோவை வைத்து உள்ளார். அந்த போட்டோவை பார்க்கும் இளம்பெண்கள் மற்றும் திருமணமான பெண்களும் இவரை நண்பராக ஏற்று பேசி உள்ளனர்.

பின்னர் அவர்களிடம் இருந்து நைசாக பேசி போட்டோவை பெற்று அந்த போட்டோவை ஆபாசமாக சித்தரித்து சம்பந்தப்பட்ட பெண்களுக்கு அனுப்பி பணம் பறித்து உள்ளார். பணம் கொடுக்காதவர்களிடம், பணம் கொடுக்கவில்லை என்றால் இந்த போட்டோவை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்வதாகவும் மிரட்டி உள்ளது தெரியவந்தது. இதையடுத்து பரமசிவத்தை போலீசார் கைது செய்தனர்.இவர் ஒரு பெண் என்ஜினீயரிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறியும். விபத்தில் சிக்கியதாக ஏமாற்றியும் ரூ.60 ஆயிரம் பறித்துள்ளார். மேலும் ரூ.1 லட்சம் கேட்டுள்ளார். கொடுக்க மறுத் ததால் அந்த பெண்ணின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளாார். மேலும் சூலூர் விமானப்படை தள மின் ஊழியர் போல் ஆள்மாறாட்டம் செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.